Sunday, 4 November 2018

மல்லிகையே மல்லிகையே

இரண்டு பேர் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்றால், அவர்களை நாம் விலக்கிவிட  முயலும் போது நமக்கும் கொஞ்சம் அடி விழத்தான் செய்யும்.  ஆனால் எதிரெதிரே இருக்கக்கூடிய  இரண்டு ஸ்வீட் கடைக்காரர்கள் சண்டை போட்டுக் கொண்டால் நமக்குதான் மகிழ்ச்சி வரும்.
   ஏனெனில் ஒருவன் மைசூர்பாக் மிட்டாயை எடுத்து வீசி அடுத்த கடைக்காரனை அடிப்பான், அவனோ ஜிலேபியை எடுத்து இவனை நோக்கி  வீசுவான் இப்படியாக சண்டை நடந்தால் நமக்குத்தான் லாபம் மற்றும் மகிழ்ச்சிதானே ! .
   
மேலே சொன்ன நிகழ்வைப் போல இரு புலவர்கள் கவிதைச் சண்டை போடுகிறார்கள்
ஒருவர் ஒட்டக்கூத்தர் மற்றொருவர் புகழேந்திப் புலவர். இது கண்ணால் பார்த்ததல்ல, கல்லூரியில் படிக்கிற காலத்தில் தத்தனூர் கிளை நூலகத்தில் பழைய நூல்களை எடைப்போட்டு வாங்கிய போது கிடைத்த தனிப்பாடல் திரட்டு எனும் நூலில்  படித்தது என்றுணர்கிறேன். 

சோழன் அவைக்களத்திலே தலைமைப் புலவன் ஒட்டக்கூத்தன் முன்னிலையில் நளவெண்பா எனும் நூல்  அரங்கேற்றம்.

அரங்கேற்றுபவன் வெண்பாப் புகழ் புகழேந்திப் புலவன் ஆவான்

அரங்கேற்றும் நேரம்  அந்திப்பொழுதாக இருந்ததால்  புகழேந்திப் புலவனும் அந்த அந்திப் பொழுதைச் சிறப்பித்து ஓர் வெண்பா பாடுகிறான்.

அந்த அந்திப்பொழுதை ஓர் மன்னனின்  ஊர்வலம் என்று உவமிக்கும் வகையில் பாடுகிறான் .
  அந்த அந்திப் பொழுது  எப்படி நடந்து வந்தது என்றால்
மல்லிகைப் பூவினையே வெண்சங்காக எண்ணிக்கொண்ட வண்டினங்கள் ஊதிஊதி முழங்க ,
    சிறந்த கரும்பாலாகிய வில்லினை உடைய மன்மதன் காம உணர்வைத்தூண்டும் தன் மலர்க்கணைகளைக் கையிலேந்தித் தாக்கிக் காளையர்களுக்கும் மகளிருக்கும் உள்ளக் கிளர்ச்சியை ஏற்படுத்த,
அந்த வேளையில் முல்லை மலர்களால் ஆன மாலை தன் தோளில் அசைந்தாட ஓர் இராஜ ஊர்வலம் போல் அந்த அந்திபோழுது மெல்லமெல்ல நடந்து செல்கிறதாம்.

பாடலையும் பாடலுக்கானப் பொருளையும் அவைமுன் வழங்கிவிட்டு அனைவருடைய விமர்சனத்திற்கு  காத்திருக்கிறான் புகழேந்திப் புலவன். 

அவைத் தலைமைப் புலவன் ஒட்டக்கூத்தன்  கடுங்கோபத்துடன்  நிறுத்தய்யா உம்  கவியை! இப்படியா சொற்குற்றம் பொருட்குற்றம் விளங்கப் பாடுவது என்றான்.

புகழேந்தி சற்றே நடுக்கத்துடன் என்ன குற்றம் கண்டீர் என்றான் .

ஒட்டக்கூத்தரோ  “மல்லிகைப் பூவினையே சங்காக எண்ணிக்கொண்டு வண்டினங்கள் அவற்றை ஊதுவதாகப் பாடினாய்  அல்லவா? அதில்தான் குற்றம் கண்டேன்  என்றான்.

மலரின் மேற்புறத்தில் அமர்ந்துதானே  வண்டுகள் தேனை குடிக்கும் . அப்படி அமர்ந்துத் தேனை குடிக்கும்  காட்சியை தாங்கள் வண்டு சங்கைப் பிடித்து ஊதுவதாக உவமிக்கின்றாய்   ?
     மலரின் முன்புறத்தில் அமர்ந்துகொண்டுத் தேனுண்ணும் வண்டின் காட்சியை சங்கின் பின்புறத்தை வாயில் வைத்து ஊதும் காட்சியோடு எப்படி உம்மால் உவமிக்கமுடிந்தது. இது காட்சிப் பிழையல்லவா? காட்சிப் பிழையோடு கூடிய உன்  கவியை இந்த அவையில் அரங்கேற்ற இடம்கிடையாது. தாங்கள் வெளியேறலாம்” என்று ஒட்டக்கூத்தன் கண்டிப்பாகக் கூறிவிட்டான்.

அவையெங்கும் ஒரே நிசப்தம்,  தொண்டையைக் கனைத்துக்கொண்டு புகழேந்தி பின்வருமாறு  கூறுகிறார்,
    அய்யா! கள் அருந்தியவனின் நிலையென்ன?
   கள் மயக்கத்தில் தான் என்னசெய்கிறோம் என்னபேசுகிறோம் என்பதுதான் அவனுக்குத்தெரியுமா?
  இரண்டு கால்கள் இருந்த போதும் அவனால் நிற்கக்கூட முடிவதில்லையே!

அதுபோல்தான் அதிகமாய் மலர்த்தேனை குடித்த மயக்கத்தில் தான் மலர்என்ற வெண்சங்கின் முன்புறத்தைப் பிடித்து ஊதுகிறோமா பின்புறத்தைப் பிடித்து ஊதுகிறோமா என்கின்ற சுயநினைவின்றி வண்டு ஊதிக்கொண்டிருந்திருக்கலாம் அல்லவா?  என்றார் புகழேந்தி.

இப்பொழுது அவையில் இருந்த மற்ற பெரும் புலவர்கள் எல்லாம் புகழேந்தியைப் பாராட்டத்துவங்கிவிட்டார்கள்.

சட்டென்றுத் தாவியெழுந்தான் ஒட்டக்கூத்தன், ஓடிவந்து புகழேந்தியை ஆரத்தழுவிக் கொண்டு, 
இப்பொழுது புரிகிறதா புகழேந்தி நான் ஏன் உன்கவியில் குற்றம் கூறினேன் என்று?
நான் குற்றம் கூறாது விட்டிருந்தால் இப்படியும் ஓர் பொருள் இருப்பது உலகிற்குத் தெரியாமலே போய்விடுமே! ஆதலால்தான் இப்படியோர் நாடகத்தை ஆடினேன் என்றுகூறி மீண்டும் ஆரத் தழுவிக்கொண்டான்.

இத்தனைக் கலவரத்தை ஏற்படுத்திய அப்பாடலைப் பாருங்கள்

மல்லிகையே வெண்சங்கா வண்டூத
வான்கரும்பு
வில்லி கணைதெரிந்து மெய்காப்ப
முல்லையெனும்
மென்மாலை தோளசைய
மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது!

மீண்டும் ஒரு கவியோடு சந்திப்போம்  நன்றி. 

அன்போடும் கவியோடும்  ; சுரேஷ்மணியன். மு.க.த. (MA)

Saturday, 27 October 2018

பைய பைய

அனைவருக்கு இனிய வணக்கம். அடியேன்  இரண்டொரு நாட்களுக்கு முன்னர்  ஔவையாரின் கொன்றை வேந்தன் நூலை மறுபடியும் படிக்க நேரிட்டது. அலைபேசியில்  வெற்றிலையில்  சுண்ணாம்பு தடவுவது போன்று  படிப்பதை விட,
  இடது கையில் நூலைத் தாங்கி, வலக்கை நடுவிரலை நாவினில் தோய்த்து பக்கத் தாள்களை புரட்டியவாறு படிக்கிற  நூல் வாசிப்பு என்பதே ஒரு வித தனி சுகானுபவம்தான், அதிலும் இலக்கிய நூல் என்றால் மகிழ்ச்சி இன்னும் பன்மடங்கு பெருகத்தானே செய்யும்.

எல்லா காலத்திற்கும் பொருந்தி வரக்கூடிய கருத்துக்களை தாங்கிய நீதி நூல்கள் இன்றும் சற்றே நம்மை மிரள வைக்கின்றன,  விடயத்திற்கு வருகிறேன்.

தத்தனூர் எம்.ஆர் கல்லூரியில் தமிழிலக்கியம் படித்த காலத்தில்  கனகராஜ் என்கிற வயதில் எம்மைவிட மூத்த,  நெல்லைச்சீமையை சேர்ந்த நண்பர் எங்களோடு படித்து வந்தார் . அவரோடு நாங்கள் நட்பு கொள்கிற காலத்தில் அவரின் பேச்சு வழக்கு குறித்து அவரை நாங்கள் நையாண்டி செய்வோம்.

ஏளா!சுரேசு  நீ எப்ப காலேஸி வருத?

மாப்ளே  இங்கனக்குள்ள வாலே  !

சுரேசு என்னடே பண்ணுத!

அந்த வாத்திமாரு கிளாசு கடுப்பா இருக்குலே! கோட்டிப்பய கணக்கா  பொலம்புதான். 

படிச்ச பொறவு என்ன சோலி  பண்றதுலே ?
 
இப்படியாக அவரின் பேச்சு வழக்குகள் இருக்கும்.  மதுரை, நெல்லை வட்டாரமொழி  வழக்குகள் அப்படித்தான் இருக்கும் என்பதை நாங்கள் தெரிந்திடாத பருவம் அது. 

வட்டார வழக்குகள் மாவட்டத்திற்கு  வேறொன்றாக மாறியிருக்கிறது.  தஞ்சை மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்றும்
வாழைப்பழம் என்பதை  வாலப்பலம் என்றும், குழம்பு என்பதை குலம்பு என்றுதான் சொல்லி வருகிறார்கள்.

கொங்கு நாட்டு வட்டார இன்னும் சுவையானது

ஏனூங் என்ன பண்றீங்க.?

இப்படியாக பல சொற்கள் வழக்கு  இருக்கும் .
நிற்க!

தத்தனூரில்  மேலூரில் உள்ள மாவட்ட கிளை நூலகத்திற்கு நானும் அவரும் அடிக்கடி நடந்து போய் படித்து  வருகின்ற ஓர் நாளில், நான் தார்சாலையில் கொஞ்சம் வேகமாக நடப்பதை பார்த்து , அவர் என்னை நோக்கி 

" சுரேசு மாப்புளே கொஞ்சம் பைய போலாம்லே  "என்றார்

அது என்ன மாமா பைய ? என்றேன் .

கொஞ்சம் மெதுவா போலாம்லே அதான்,  என்றார்.

அன்றுதான் பைய என்ற அவரின் நெல்லை  மாவட்ட சொற்பதத்தை கேட்டு, மாம்ஸ் மெதுவா போகலாம்னு சொல்லுய்யா , அது என்ன பைய, இதுலாம் ஒரு தமிழ்  வார்த்தை என்று அவரை நையாண்டி செய்திருக்கிறேன்.

நான் இரண்டோர் நாட்களுக்கு முன் படித்த ஔவ்வை பாட்டியின்  கொன்றை வேந்தனில்
'' பையச் சென்றால் வையந் தாங்கும் "
என்கிற வரியின் முதல் வார்த்தை நான் மேற்சொன்ன பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்வை என்னை எண்ணிப்பார்க்க அல்லது பதிவிட  வைத்திருக்கிறது.
   
எந்த வார்த்தையை கேட்டு இதெல்லாம் ஒரு தமிழா?  என்று அந்த நண்பரை நக்கல் செய்தேனோ , அந்த வார்த்தையை ஔவ்வை பாட்டியும் பயன்படுத்தியிருக்கிறாள் என்றாள்  அதுதான் தூய்மையான தமிழ் சொல் ஆகும். 
' பையச் சென்றால் வையந் தாங்கும் "
இதில் பைய என்பதற்கு என்பதற்கு மெள்ள என்று பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது .
பைய - மெல்ல  சென்றால் - (ஒருவன்தகுதியான வழியிலே) நடந்தால், வையம் - பூமியிலுள்ளோர், தாங்கும் - (அவனை) மேலாகக் கொள்வர்.
அதாவது ஒருவன் தகுதியான வழியில் பொறுமையுடன் மெதுவாக நடந்தால் உலகத்தார் அவனை மேலாகக் கொள்வர், என்கிறன்றனர் உரையாசிரியர்கள்.

எனக்கு இன்னும் கொஞ்சம் "பைய" என்கிற சொல் குறித்து வேறு ஏதேனும் தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதா ?  என்கிற எண்ணத்தின் காரணமாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னதான  திருக்குறளை ஆய்ந்து துழாவிய போது, அங்கேயும் ஒரு இன்ப அதிர்ச்சிக்கு ஆளானேன். வள்ளுவப் பாட்டன் ஓரிடத்தில்

அசையியற்கு உண்டுஆண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்
(குறள்.: 1098)
என்கிற குறளில் பைய என்கிற சொல்லானது மெல்ல என்கிற பொருளைத் தருகிறது
மணக்குடவர், பரிமேலழகர் உள்ளிட்ட மூத்த உரையாசிரியர்கள் முதல் இக்கால உரையாசிரியர்கள் வரை மெல்ல அல்லது ஓசைப்படாமல் என்கிற விளக்கத்தைத்தான்  தருகிறார்கள் .

மேற்சொன்ன குறளுக்கான பொருளைப் பாருங்கள்,
" யான் நோக்கும்போது அதற்காக அன்பு கொண்டவளாய் மெல்லச் சிரிப்பாள்; அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது "

என்பதாகும் .

ஆக பைய என்கிற வார்த்தை வட்டார வழக்கு சொல் அல்ல அது தமிழின் தொன்மையான சொல் ஆகும்.  மேலும்

கலித்தொகையிலும் இந்த பைய என்கிற சொல் கையாளப்பட்டுள்ளதை நேற்று கலித்தொகையை  மேம்போக்காக மேய்ந்த போது அறிந்தேன்  பாலைத்திணையில்  பாலைக்கலி பாடிய பெருங்கொடுங்கோ ஒரு பாடலில்

செவ்விய தீவிய சொல்லி,அவற்றொடு

பைய முயங்கிய அஞ்ஞான்று அவை எல்லாம்

பொய்யாதல் யான் யாங்கு அறிகோ மற்று? ஐய!

அகல் நகர் கொள்ளா அலர்தலைத் தந்து,

பகல் முனி வெஞ் சுரம்உள்ளல்
அறிந்தேன்;     என்கிற பாடலில்,

பைய என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார் என்பதை அறிய முடிகிறது.

"  நல்லதும் தீயதும் சொல்லி அவற்றைப் பற்றிப் பேசிக் கொண்டே மெதுவாக, இளைப்பாறுதலாக, மென்மையாகஅணைத்து மகிழ்ந்திருந்த அந்தப் பொழுதில்,  என உரையெழுதும் ஆசிரியர்கள் பைய என்பதற்கு மெதுவாக என்ற பொருளையே எழுதியிருக்கின்றனர். எனவே
பைய என்கிற சொல் நேற்றோ இன்றோ உருவானதல்ல அது சங்க இக்கிய காலத்தில் நம் மூதாதையர்களும், புலவர்களும் பயன்படுத்திய முதன்மையான இலக்கிய வழக்கான பழந்தமிழ் சொல் என்பதை மேற்கண்ட இலக்கிய பாடல்களை படிக்கிற போது சற்றே வியப்பாக இருக்கிறது. 

இந்த "பைய பைய" என்ற சொல் தொடர்பாக ஒரு நகைச்சுவையான சம்பவம் ஒன்றையும்  சொல்வார்கள்.

இது போல் தென் மாவட்டம் ஒன்றிலிருந்து வந்திருந்த பயணி ஒருவர் சென்னை பேருந்தில் பயணச்சீட்டு பெற நடத்துனரிடம் பணத்தைக் கொடுக்கிறார். பயணச்சீடைக் கொடுத்த நடத்துனர் "சில்லறை இல்லை, அப்புறம் தருகிறேன்" என்று சொல்ல பயணியும் அதை ஒப்புக் கொள்ளும் விதமாக "அதனாலென்ன பைய கொடுங்க" என்று கூறுகிறார்.

உடனே நடத்துனரோ "நான் சொல்றேனில்ல சில்லறை இல்லைன்னு, நம்பிக்கை இல்லாம பைய குடுக்கச் சொன்னா எப்படி?" ன்னு கேட்டாராம்.

பைய பைய சிரிப்பு வருகின்றதுதானே  ! 

பை பை பை பை

அன்போடு  : சுரேஷ்மணியன் MA,

Saturday, 20 October 2018

வரலாறு பற்றி அதிகம் எமக்கு தெரியாவிட்டாலும், அதை அறிந்துகொள்ளவும், அதை மற்றவருக்கு தெரியப்படுத்தவும் அதிக ஆர்வமுண்டு. என்னுடைய பாட்டனார் ராஜகோபால் கொண்டியார் அதிக வரலாற்று நூல்களையே படிப்பார் அதைப் பார்த்து வளர்ந்த எனக்கு அந்த ஆர்வம் வந்துவிட்டது. எங்கள் ஊர் பெயர் சுத்தவல்லி சதூர்வேதிமங்கலம் ஆகும்.பிற்கால அதாவது முதலாம் இராஜேந்திர சோழனுக்கு பிறகான சோழப்பட்டத்தரசிகளில் ஒருவர் அது காலப்போக்கில் சுத்தமல்லி என ஆகிவிட்டது. எங்கள் ஊரில் ஒரு வரதராஜ பெருமாள் கோவில் ஒன்றுண்டு, கேட்பாரற்று ஒரே ஒரு பூட்டை மட்டுமே காவலாக கொண்டு இருந்த அந்தக் கோவிலில் பல ஆண்டுகளுக்கு முன் சிலைகடத்தல் மன்னன் கபூர் பல சிலைகளை கடத்திவிட்டான். அவன் மியூசத்தில் வைத்திருந்த அந்த சிலைகள் நூறு கோடி வரை ஏலம் போயிருக்கிறது, ஆனால் வாங்குபவர்களுக்கு ஒரு தயக்கம், அந்தச்சிலையின் அடிபீடத்தில் சுத்தவல்லி என்ற பெயர் இருப்பதுதான். எவ்வாறோ கபூரும் பிடிபட்டான்! எங்கள் ஊர் சிலைகளும், ஹீபராந்தக சதூர்வேதி மங்கலம் என்கிற திருப்புரந்தான் விநாயகர் சிலை உள்ளிட்ட அனைத்து சிலைகளும் சில தன்னார்வலர்களின் முயற்சியால் மீட்கப்பட்டு பிரதமர் மூலம் இந்தியா வந்தடைந்தனர். எங்கிருக்கிறார்கள் என தெரியவில்லை. ( எனக்கு மூன்று ஆண்டுகள் முன்பே தெரியும் ) இப்படியான எங்கள் ஊர் சுத்தவல்லியில் திருவிழாக்களின் போது சில வகையறா என்கிற தலைக்கட்டு அதாவது குழுப்பெயரில் மண்டகப்படி நடத்துவர். அருள்மிகு காளியம்மன் சாமிக்கு நகை போடுவது ஒரு வகையறா, பூ அலங்காரம் சூடுவது, சாமிசிலை ஏற்பது, சாமியை தாங்கி பிடிப்பது, திருக்குடை பிடிப்பது எல்லைக்கிடா வெட்டுவது என ஒவ்வொரு வகையறாக்களுக்கும் ஒதுக்கப்படும். அந்த கோர்ட் உத்தரவுப்படியான ஆவணம் என் பாட்டனார் கைவசம் இருபது ஆண்டுகள் இருந்தது. இப்படியான ஒரு வகையறா பாலதரியன், அவர்களின் உண்மையான பட்டப்பெயர் அடியேன் ஆய்ந்த அளவில் சொல்கிறேன் " பல்லவர் திரையோன் " அடுத்து சம்பன் வகையறா , மகோன்னதமான சோழ வரலாற்றின் இடத்தை பிடித்த குறுநில மன்னர்களான. "சம்புவராயர்கள் வகையறா " அடுத்து "சீப்பிலி வகையறா " சீட்புலியார் குறுநில மன்னர் வகையறா " நான் சார்ந்த "கொண்டி" வகையறா, என்பது கொண்டியார் என்ற குறுநில மன்னரின் பட்டப்பெயராகும். _____வரலாறு நீளும். சுரேஷ்மணியன் MA,

கொண்டியார் வகையறா

Tuesday, 12 December 2017

பழமொழி

நான் "ஆல் "ன்னு சொன்னா, இவன் "பூல் "ன்னு சொல்றான்ய்யா  .
   இது மிகச்சிலரால் அல்லது பயன்பாட்டிலோ இல்லாத பழமொழியாகும். இது ஆபாசமான பழமொழியன்று,

 பழமொழி என்பது அனுபவத்தின் வாயிலாக மாந்தரின் உணர்ச்சி வெளியீட்டு கருவியாக வெளிப்படுத்துவது ஆகும்.  ஆனாலும் இந்த பழமொழிகள் பயன்படுத்தும், பிறரிடம்  கூறும் போக்கு நம்மவரிடையே நாளுக்கு நாள் அருகிவருகின்றது என்பது சற்றேறழத்தாழ நிதர்சனமான உண்மையும் கூட.

  வயதான கிராமத்துவாசிகளிடம் நாம் பேச்சு கொடுத்தோமேயானால் பேச்சினூடே அவர்களின் வாழ்வியலில் கண்டறிந்த, கேட்டறிந்த பழமொழிகள் எண்ணெய் தோய்த்து போட்ட பாப்கார்ன் சோளமாய் வெடித்துச்சிதறும்  .
   வேலையே செய்ய திறமில்லாத ஒரு நபரின் வலிவை விளக்க
 " அருக்க மாட்டாதவன் சூத்துல அய்ம்பத்தெட்டு அருவாளாம் " என்றும்,

 ஒரே நபருக்கு ஒரே சமயத்தில் பல வேலையிருக்குமாயின்
    " ஊருக்கு ஒரு தேவுடியா, அவ யாருக்குன்னுதான் ஆடுவாளாம் " என்ற வகையில் சொலவடைகள் சுவைமிகுந்ததாக இருக்கும்.

   பழமொழிகள் வட்டாரம் சார்ந்த வழக்கு மொழியினதாகவும் இருக்கும், நெல்லை, கொங்கு மண்டலத்து பழமொழிகள் சற்றே வித்தியாசம் நிறைந்தது.
         நாட்டார் பழமொழிகள், தென்னகத்து பழமொழிகள் என்று நிறைய பேர் பழமொழி மற்றும் நாட்டுப்புறவியல் சார்ந்த ஆய்வு செய்து, கள ஆய்வு மேற்கொண்டு, சேகரித்து  முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள், நெல்லைப்பகுதியில் பழமொழியை சொலவம் என்றும் விளிப்பார்கள். எங்கள் மாவட்டமான அரியலூரிலும் எம்  ஊரான சுத்தமல்லியிலும்  சரி பழமொழி அவ்வளவேனும் அதிகம் இல்லை, அல்லது புழக்கத்தில் இல்லை  என்றே உணர்கிறேன்.
   சரி  முன்னர் நான் சொன்ன மேட்ருக்கு வருவோம்

நான் "ஆல் "ன்னு சொன்னா, இவன் "பூல் "ன்னு சொல்றான்ய்யா !!!
  இந்த பழமொழியை, இன்று காலை தமிழ்த்துறை முதுகலை முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆக்டிங் கிளாஸ் போனபோது பழமொழி நானூறு எனும் பதிணெண் கீழ்க்கணக்கு நூல் மூலமாகத்தான் அறிய நேரிட்டது.
    அங்கே நான் ஆல் என்பதையும்
 பூல் என்பதையும்
எவ்வாறு ஆண், பெண் நிறைந்த அந்த வகுப்பில்  கையாண்டிருப்பேன் என்ற கேள்வி உங்கள் சிந்தனையில் தொக்கி நிற்கும், உண்மையும் கூட.

ஆனால் ஆல் என்பது ஆலங்குச்சியையும்,
பூல் என்பது பூலாங்குச்சியையும் குறிப்பதாகும்.  விவராமாகவே சொல்லிவிடுகிறேன், பாடலை கடைசியில் தருகிறேன்.

ஒரு மன்னன் தான் சொல்வதை செய்வதெற்க்கென ஒரு பணியாளனை தன் அருகிலேயே, பணிக்கு அமர்த்திக் கொள்கிறான் எனில், அந்த மன்னன் தன் பணியாளனிடத்திலே இதோ எதிரிலே நிற்பவனை வேலின் மூலமாக குத்தி கொலை செய் என்றால், அந்த பணியாளன் தான் குத்தப்போகும்  எதிரே நிற்பவன் தனது உறவினன் என்பதால், தான் குத்தமாட்டேன் என்று மன்னனிடம் மறுத்து பேசுவானாயின் அவன் யாரைப் போன்றவன் என்றால், "ஆலங்குச்சியால் பல்துலக்கு என்றால், பூலாங்குச்சியால் பல்துலக்கு "என்று சொல்பவனை போன்றவன் ஆவான், இதை நான் சொல்லவில்லை அந்த நூலை எழுதிய மூன்றுரையனார் கூறுகிறார், அவர் கூறுவதையும் கொஞ்சமேனும் படியுங்களேன்.

எமரிது செய்க எமக்கென்று வேந்தன்
தமரைத் தலைவைத்த காலை - தமரவற்கு
வேலின்வாய் ஆயினும் வீழ்வார் மறுத்துரைப்பின்
ஆலென்னின் பூலென்னு மாறு.  

#என்னம்மா அங்க சத்தம் ?  ஒன்னும் இல்லே மாமா சும்மா பேசிக்கிட்டு இருந்தேன் மாமா  .

நன்றி மீண்டும் சந்திப்போம்  .   சுத்தமல்லி சுரேஷ்மணியன் MA, 

Monday, 10 July 2017

திண்ணை

காணாமல் போன திண்ணை.

அனைவருக்கும் இரவுப்பொழுதின் இனிமையான வணக்கம்.

இன்றை நவநாகரீக தமிழரின் வாழ்வியல் பயன்பாட்டிலும், அடித்தட்டு சமூக மக்களின்,  கிராமிய வாழ்க்கை பயன்பாட்டிலும் அவர்களாகவே வலிந்து தொலைத்துக் கொண்டிருப்பது " திண்ணை " என்றுதான் சொல்ல வேண்டும்.

காணாமல் போன தமிழரின் கருவிகளாக  முதன்மையானதாக
- அம்மிக்கல்லையும்
- மாவு அரைக்கும் குடைக்கல்லையும்
-உரலையும் உலக்கையையும் சேர்த்துக்கொள்ளலாம்.

அரிதினும் அரிதாய் மேற்சொன்ன அடுதலுக்கு ( சமையல் செய்ய உதவிய பொருள்கள் )
பயன்பட்ட பொருள்களை சில கிராமங்களில் பயன்பாட்டில் இருப்பதை காணும் போது ஓர் இனம் புரியாத மகிழ்ச்சியும், பெருமிதமும் தோன்றும்.

அத்தகைய காணாமல் போன பட்டியலில் நம்மவர்கள் திண்ணையையும் சேர்த்துவிட்டார்கள்.
`` திண்ணை " இது தமிழரின் வீட்டின் முன்பகுதியில் நிலைக்கதவு எனும் வாசற்படியின் நடைபாதையின் இருமருங்கிலும் ஒன்றரை அடி முதல் உயரம் கொண்டதாய் அமைக்கப்பட்டிருக்கும்.

திண்ணை பள்ளிக்கூடம்,

திண்ணைப்பேச்சு,

திண்ணையிலே கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துதான் வாழ்க்கை
எனும் சொற்கள், சொலவடைகள்  வழி திண்ணையின் பயன்பாட்டை நாம் ஒருவாறாக  யூகித்தறியலாம்.
 திண்ணையை அக்கால Reception room ( வரவேற்பு அறை)
என்றுகூட சொல்லலாம்.

எங்கள்  ஊர் சுத்தமல்லியில் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் திண்ணை இல்லாத வீடுகளை பார்க்கமுடியாது, அந்த அளவுக்கு திண்ணைகள் இருந்தன.  ஆனால் இன்றோ திண்ணை இருக்கும் வீடுகளை பார்க்க முடியாது. இது தமிழகம் முழுக்க பொருந்தும்.
திண்ணை என்பது  வீட்டிற்கு வரும் உறவினர்களோ , அறிமுகமற்றவர்களோ முதலில் அமரும் இடம் ஆகும் .மேலும் வீட்டாரின் அரவமில்லாத வேளைகளில் வழிப்போக்கர்கள் இளைப்பாறும் இடமும் கூடவாக பயன் தரும்.
ஒருவரை திண்ணையில் மட்டுமே  அமர்த்தி பேசி வழியனுப்பினால் அவர் அவ்வீட்டாருக்கு அறிமுகமில்லாதவர், ஓரளவு மட்டுமே பழக்கம் உடையவர் என்பதை காட்டும் உறவு அளவீட்டு கருவி எனவும் அறியலாம்.
  எங்கள் வீடு கிழக்கு பார்த்த நாட்டுஓடு வீடு, அதில் வீட்டின் தெற்கு பகுதியில் ரோட்டை பார்த்தவாறு சுவரை ஒட்டியவாறு ஒரு அடி உயரத்தில் பதினைந்து  அடி நீளத்தில் திண்ணை இருக்கும்.  அந்த இடம் காலை மாலை  வேலையில் பரபரப்பாகவும், பேச்சரவம் நிறைந்ததாக இருக்கும்.  என் தாத்தா பேரு வே .ராஜகோபால் எல்லோரும் ராசகோவாலு என்பர், சிலர் ஆங்கிலத்தில் சுருக்கி VR என்பார்கள். இந்த மனுசனுக்கு தெரியாமல் ஊரில் யாரும் நிலத்தை வாங்கவோ, விற்பனை செய்யவோ மாட்டார்கள் .நிலத்தை விலை பேசி, நில அளவு அளந்து, ரிஜீஸ்ட்டர் ஆபிசில் பத்திரம் எழுதுவது வரை இவரையே நாடுவார்கள். ஊருக்குள் ஏதேனும் தகராறு என்றால் அதை பஞ்சாயத்து பேசி தீர்ப்பதற்கு என்று பழைய பிரசிடன்ட் ரங்கசாமி, கணக்குபிள்ளை வாசுதேவன், தலையாட்டி ராமர், நொண்டி நாட்டார், சீரணி கந்தசாமி, பூனை என்ற தாத்தா இது போன்ற  சில பெருசுகள் இருக்கும், அதில் என் தாத்தா VR இல்லாமல் கூட்டம் எங்கள் வீட்டு திண்ணையில்  கூடாது, அந்தளவுக்கு  முக்கியமானவர்.  இது போன்ற இன்ன பிற காரியங்களில் என் வீட்டு திண்ணை களைகட்டும் .

நான் அப்போது கொஞ்சம் பொடுசு அதாவது சின்ன பையன், தூங்கி வழிந்தவாறே என் தாத்தா மடியில்  அமர்ந்து அந்த பஞ்சாயத்துகளை பார்த்த ஞாபகம் மனத்திரையில் வந்து போகிறது. அந்த திண்ணையில்தான் என் தாத்தா  சாப்பிடும் நேரம் தவிர, பகல் பொழுது முதல் இரவு தூக்கம் வரை கட்டில் போட்ட அந்த திண்ணை  அவருக்கானது.  அந்த இடத்தை தவிர வேறு இடத்தில் அவர்  தூங்கி நான் பார்த்ததில்லை. (மருத்துவமனையை தவிர)
 அந்தி நேரத்திலேயே திண்ணையை பெருக்கிவிட்டு ஒரு பெரிய சொம்புடன் குடம் நிறைய நீர் இருக்கும், கத்தி கத்தி பேசி தொண்டை வறண்டு போனால் நாவறட்சியை போக்கிடவும், வெற்றிலை புகையிலை போடுபவர்கள் காறியை பிச்சிக் பிச்சிக்  என்று எச்சியை துப்பிவிட்டு வாய் கொப்பளிப்பதற்கும் அந்த நீர் பயன்படும்.

யார் ? யார் மீது? குற்றம் சாட்டி பஞ்சாயத்தை கூட்டினார்களோ அந்த இருவர் மட்டுமின்றி இரு குடும்பத்து சொந்தக்காரர்கள், பங்காளிகள், பொடுசுகள், வாண்டுகள் என அனைவரும் வந்து விடுவர்.
 சில நேரங்களில் கைகலப்பும் ஏற்பட்டுவிடும்,அந்த இக்கட்டான நேரத்தில் ஏதோ ஒரு பெருசின் அதட்டலான பேச்சுக்கு மந்திரமாய் கட்டுப்பட்டு அடங்கிப்போவர்.  ( அது அந்தக் காலம் )

பஞ்சாயத்தின் தீவிரம்,மற்றும்  கூடும் கூட்டத்தின் மனித தலைகளுக்கு ஏற்ப எங்கள் சின்னதாத்தா  வீட்டு திண்ணையிலும் கூட்டம் கூடும். அந்த வீட்டில் சித்தப்பா ராஜேந்திரன் மேற்கே புதுவீடு ரைஸ்மில் கட்டி அங்கே போனது முதல் அடிக்கடி அவ்வீட்டு திண்ணை மனிதத்தலைகளால் நிரையும்.
விடுமுறை நாட்களில் தெரு வாண்டுகள் அங்கேதான் டேரா போட்டு விளையாடும். திண்ணையிலும் திண்ணை அருமையான திண்ணை. சிமெண்ட் சுவருடன், நாட்டு ஓடு வேய்ந்து மூன்று அடி உயரத்தில் உள்வீட்டுக்கும் மேலான பரப்பளவில் அமைந்த சிமெண்ட் திண்ணை அது.
கடும் கோடையிலும் அவ்ளோ குளிர்ச்சியா இருக்கும், தாத்தாவும் பகல் பொழுதுகளை அங்கேதான் கழிப்பார்.தாத்தா குடிக்கும் பூட்டு மார்க்  சுருட்டின்  புகை மணம் சூழ்ந்த அந்த குளிர்ச்சியான திண்ணை இன்னும் என்னுள்ளுள் அகலவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இரவு வேளையில் அக்கம் பக்கத்து பெண்கள் கூடி ஊர்க்கதை பேசும் இடமாக, நிலா வெளிச்சத்தை பார்த்தவாறு விளக்கினை ஏற்றிவைத்துக்கொண்டு சோறு உண்ணும் இடமாக, அறுவடைக்காலங்களில் தானியங்களை மூட்டைகளாக கட்டி அடுக்கி வைக்கும் இடமாகவும் திண்ணைகள் மாறும்.
   சின்ன தாத்தாவின் மூத்த மகன் பெயர் ராஜேந்திரன், அவர் அதிமுக காரர் : சட்டமன்ற, உள்ளாட்சி  தேர்தல் காலங்களில் அந்த சின்ன தாத்தா வீட்டுத் திண்ணை அதிகாரபூர்வ அதிமுகவின் தேர்தல் மைய இடமாக மாறும், அஸ்திர வியூகங்களும் இங்கேதான் வகுக்கப்படும். அப்போதெல்லாம் தெருவில் போவோருக்கும் வருவோருக்கும் அந்த திண்ணை  சுண்டல் மழையாய் பொழியும். இப்போது ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பு வகித்த சம்பத்தின் அப்பா ரங்கசாமி திமுக தீவிர தொண்டர், அத்தோடு அக்கால பிரசிடெண்டாக இருந்தவர், அவர் வீட்டு திண்ணையிலும் திமுக தேர்தல் வியூகங்கள் வகுக்கபடும், சில ஊர்ப்பஞ்சாயத்தும் குறைந்த அளவில் கூடும்.

அந்த நேரத்தில் அந்த சின்ன தாத்தா வீட்டு திண்ணையை சற்றே புறக்கணித்துவிடுவேன் …காரணம் ஏனெனில் அந்த அம்மா கட்சி விசுவாசிகள்,
என் அப்பா திமுக என்பதால் என்னையும் சேர்த்து
 " ஓட்டுதான் போடமாட்டீங்க, சுண்டலாவது தின்னு பாரு" என நையாண்டி செய்வார்கள் . இப்படியான அந்த திண்ணையும், பல விதமான வீடுகளின் திண்ணைகள்  சுவாரசியமானது .
கூரை வீடுகளிலும்அப்போது திண்ணை இல்லாமல் இல்லை என்றுதான் கூறியே ஆகவேண்டும், கூரை வீட்டு மண் திண்ணையில் அமர்ந்தாலோ வியர்வையுடன் ஆடையற்ற மேலுடலுடன் படுத்தாலோ சாணத்தால் மெழுகப்பட்ட மண்ணின் மேற்பகுதி உடலோடு ஆங்காங்கே ஒட்டிக்கொள்ளும்.அதிலும் சிலர் வீட்டுப் பெண்கள் கடலைசெடியை எரியவிட்டு அந்தக்கரியை சாணத்துடன் சேர்த்து கரைத்து  மணியாசி கல் கொண்டு இத்து மெழுகப்பட்ட திண்ணை சும்மா கருகருன்னு மின்னும்,
அப்புடி ஒரு கருப்பாக கருக்கும். குறி கேட்பது,
கைரேகை ஜோசியம்,
கிளி ஜோசியம் பார்ப்பது,
 தாயம்,
ஆடுபுலிஆட்டம்,
பல்லாங்குழி விளையாட்டு  போன்ற இன்ன பிற இத்யாதிகள் பெரும்பான்மை ஆண்களின் பெருத்த ஆராவாரமற்ற தெருவின் ஏதோ ஒரு கூரை வீட்டு திண்ணையில்தான் நடக்கும். சில வீட்டுத்திண்ணைகளில் சில வயதான பெருசுகள் பொடிப்பசங்களை அனுமதிக்காமல்  திண்ணைக்கும் காவலாகவும் இருப்பார்கள்.

மேலும் அவரவரின் பொருளாதார வளங்களின் ஏற்ப வீட்டு திண்ணையின் அமைப்பு நேர்த்தியும் மாறுபடும்.
சித்தப்பா நம்பிராஜ் அவர்களின் பழைய ஓட்டு வீட்டுதிண்ணை கொஞ்சம் சொகுசான முறையில் இருக்கும் முதுகை வைத்து சாய்ந்து படுக்கும் வகையிலான சுவற்றை ஒட்டி சாய்வு திண்டு அங்கே இரண்டு உண்டு, எறவானத்தை தாங்குகின்ற தூண் அடிப் பருத்தும் நுனி சிறுத்தும் தச்சரின் கை உளியால் வழவழ என்று செதுக்கப்பட்டிருக்கும்.  அந்த திண்டில் முதுகை வைத்து சாய்ந்து படுத்து இருக்கால்களையும் பிணைத்து அந்த தூணை உந்தியவாறு சித்தப்பா நம்பிராஜ் அவர்களின் தந்தை, தாத்தா மாரிமுத்து அவர்கள்  தினமணி நாளிதழ் படித்துகொண்டிருப்பதையும் நான் பார்த்திருக்கிறேன். அந்த தெரு இளவட்டங்களின் பகல் பொழுது அந்த திண்ணையில் வேடிக்கை பேச்சுடனும் சில நேரம் கழியும்.

இப்படியான திண்ணை கலாச்சாரம் மெல்ல மெல்ல நம்மில் இருந்து நாமே அழித்து வருகிறோம். ஓட்டுவீடு, கூரைவீடு  முதல் மாடிவீடு வரை திண்ணையை இடித்து புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது . அன்று அறிமுகமற்ற ஒருவரை நாம் சந்திக்க சென்றால் அவர் வீட்டினுள்ளே இருந்து வெளியே வரும்வரை திண்ணையில் காத்திருந்தோம்.
இன்றோ காலிங்பெல்லை அழுத்திவிட்டு ஒற்றைக்கால் தவமேற்கின்றோம்.

 இடவசதியை கருத்தில் கொண்டு என்வீட்டுத் திண்ணை அண்மை ஆண்டில் இடிக்கப்பட்ட போது இனம் புரியாத சோகம் என்னை விழுங்கியது, செல்போன் இருந்தும் அன்றைக்கு அந்த திண்ணையை ஏன் போட்டோ எடுக்காமல் போனேன் அப்படியென்ற நினைப்பும் அடிக்கடி அந்த திண்ணையற்ற வெற்றிடத்தை பார்க்கும் போது மனதில் தோன்றும்,
போட்டோ எடுத்திருந்தால் அடுத்த தலைமுறைக்கு அந்த திண்ணையை காட்டி கதை கூறிக்கொண்டு இருக்கலாமே என்று .

#பெருசுகளின் பேச்சரவம் கேட்டிலையோ !
அன்போடு :சுத்தமல்லி  சுரேஷ்மணியன்

Wednesday, 24 May 2017

காக்கையும் அரசமரமும் .

பள்ளிக்கூடத்துல படிச்ச காலகட்டத்துல நம்மாள மறக்க முடியாத ஒரு விசயம் என்னவென்றால்
" பள்ளிக்கூடத்துக்கு இன்சுபெக்சனுக்கு இன்ஸ்பெக்டர் ( ஆய்வாளர்)  வந்து கேள்வி கேட்பாரே அதுதான்.
அன்னைக்கி மட்டும் எல்லா வாத்தியாருகளும் நேரத்துல வந்திடுவாங்க,எங்க ஊரு சுத்தமல்லி சின்ன பள்ளிக்கூடம் ஒரு பெரிய அரசமரம் இருந்துச்சி, இலையெல்லாம் கீழே உதிர்ந்து சருகாகி கிடக்கும்  அந்த சருகையெல்லாம் பசங்கதான் பொறுக்கனும், ஆளுக்கொரு சின்ன குச்சிய வச்சிக்கிட்டு வடைய கம்பியால குத்தி குத்தி எடுப்பாங்களே அது மாதிரி அந்த குச்சி நிறையும் குத்தி குத்தி எடுப்போம். பொம்பள  பசங்க எல்லாம் க்ளாஸ் ரூமை கூட்டி பெருக்கிட்டு எல்லோரும் வாயில விரல வச்சி பொத்திகிட்டு அமைதியா உட்கார்ந்திருப்போம். அந்த அரச மரம் மட்டும் சலசலன்னு சத்தம் போடும், சமையல் ரூம் பக்கத்துல நாலு காக்காவும் சத்தம் போடும்.
 புலி வருது, புலி வருது, எனும் கதையாக பன்னிரண்டு மணி அளவுல ஜீப்புல வருவாரு அந்த இன்ஸ்பெக்டரு. அப்போ பள்ளிக்கூடமே  நிசப்தமாக இருக்கும்.
 அந்த நிசப்தத்தின் இடையே பள்ளிக்கூடத்து சமையல் கொட்டாயிலிருந்து  சோயாபருப்புடன்  முட்டைக்கோஸ் வேகும் போது அந்த குழம்பிலிருந்து ஒரு அபார வாசம் வருமே !  அடடா! அடடா !  தேவாமிர்தமாவது, மசிராவது, அப்படி கமகமக்கும்.

சரி விசயத்துக்கு வருவோம் இங்க இன்ஸ்பெக்டரு அதான் ஆய்வாளரு நேர்ந்த கதிய பாருங்க.

ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர்
வந்தாரு.
அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய
அவரோட வேலை பாத்தவங்க
சொல்லி இருக்காங்க,  அதனால எதுக்கும்
தயாராத்தான் அவர் வந்தார்.
முதல்ல ஒரு வகுப்புக்குள்ள போன
உடனே பசங்க எல்லாம்
எழுந்திருச்சு நின்னாங்க.

சரி எதாவது கேள்வி கேக்க
வேண்டாம்ன்னு முதல் பையன எழுப்பி.....
"உன் பேர் சொல்லு" ன்னாரு
அவனும் "பழனி"ன்னான்
"உன் அப்பா பேரு"
"பழனியப்பா"
அடுத்தப் பையன எழுப்பி
"உன் பேர்
சொல்லு"ன்னாரு
அவனும் "மாரி"ன்னான்
"உன் அப்பா பேரு"
"மாரியப்பா"
அவருக்கு கொஞ்சம் டவுட் வருது.
இருந்தும் அடுத்தப் பையன எழுப்பி..........
"உன் பேர் சொல்லு"
"பிச்சை"
"உன் அப்பா பேரு" "பிச்சையப்பா"
இப்பொ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு.
சரி பசங்க வச்சி செய்ய ஆரம்பிச்சுட்டாங்க
அப்படினு புரிஞ்சுருச்சு.
அடுத்தப்
பையன எழுப்பினாரு.
"முதல்ல நீ உன் அப்பா பேரைச்
சொல்லு...."
(மனசுக்குள்ள ஒரு பெருமிதம்)
"ஜான்"

"இப்பொ உன் பேரைச் சொல்லு" "ஜான்சன்"
அப்புறம் என்ன !!!! அதுக்கு அப்பறம் அந்த
பள்ளிக்கு எந்த ஆய்வாளரும் வரதே இல்ல.

அன்போடு : சுரேஷ்மணியன்.

Wednesday, 8 March 2017

மீண்டும் பள்ளிக்கு போகலாம் !

எங்க ஊரு சுத்தமல்லியில் நான்  1989 களில் பள்ளிகளில் படிக்கும்போது, தொடக்கப்பள்ளிக்கும், உயர்நிலைப்பள்ளிக்கும் நாங்கள் வைத்திருந்த பெயர்  சின்னப்பள்ளிக்கொடம், பெரியபள்ளிக்கொடம் என்பதாகும்.
   ஊருக்கு கிழக்குப்பகுதியில் சிவன் கோவிலுக்கு அருகில் இருப்பது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியான  சின்ன பள்ளிக்கூடம்.
ஊருக்கு மத்தியில் காளியம்மன் கோவில் அருகில் இருப்பது அரசு உயர்நிலைப்பள்ளி எனும் பெரிய பள்ளிக்கூடம், ஆனால் இந்த இரண்டு பள்ளிக்கும் உள்ள பொருத்தம் என்னவென்றால் பள்ளிக்கு அருகில் கண்டிப்பாக சிறிய குளம் ஒன்று உண்டு.

சின்னப்பள்ளிக்கூடம் என்றாலே இன்றும் எங்களுக்கு நினைவுக்கு வரும் ஆசிரியர்கள்
ஒன்றாம் வகுப்பு  அ பிரிவு பிள்ளையார் கோவில் தங்கராசு வாத்தியார்,  ஆ பிரிவு மீசை வாத்தியார் ( எனக்கு பக்கத்து வீடு)  இரண்டாம் வகுப்பு குண்டு டீச்சர் ( தங்கராசு வாத்தியாரின் மனைவி சரசுவதிக்கு நாங்கள் வைத்த பெயர்)
மூன்றாம் வகுப்பு சின்னசாமி வாத்தியார் ( எனக்கு பக்கத்து வீடு)
பிறகு மீசை மாரிமுத்து வாத்தியார்,
பெரிய வாத்தியார் (H M)  சாமிநாதன் .
மேலே சொன்ன வாத்தியார்கள் எல்லோரும் சின்னபள்ளிக்கூட மாணவர்கள் வாக்களிப்பதாக இருக்கும்  தேர்தலில் நின்றிருந்தால் மாணவர்களின் அத்தனை ஓட்டுகளையும் சிந்தாமல் சிதறாமல் சமமாக பெற்றிருக்கூடியவர்கள் தங்கராசு வாத்தியாரும் அவர் மனைவி குண்டு டீச்சரும்தான். அந்த அளவுக்கு பசங்க மேல் பாசமாக இருப்பார்கள், அவர்கள் கைகளில் ஒரு நாளும் மாணவர்களை அடிக்கின்ற மூங்கில் குச்சிகளை  பார்க்க முடியாது . இதற்கு நேர்மாறானவர்கள் மீசை சாமிநாதன் வாத்தியாரும்,  மீசை மாரிமுத்து வாத்தியாரும் ஆவார்கள் ,ஏன் என்றால் வீணை இல்லாத கலைமகளை கூட பார்த்துவிடலாம், ஆனால்  இவர்கள் கையில் மூங்கில் குச்சி  இல்லாமல் இவர்களை பார்க்க முடியாது, அதிலும் அவர்கள் உட்கார்ந்திருக்கும் நாற்காலியில்  இருந்தே பத்து பதினைந்து அடி தூரத்தில் உட்கார்ந்திருக்கும் பயலுகளையும் அடிக்கிற மாதிரி நீண்ட மூங்கில் குச்சி வைத்திருப்பார்கள், அந்த குச்சியை அழகாக வெட்டி, கணுக்களை நீக்கிவிட்டு அந்த குச்சியை  ராஜமரியாதையோடு வாத்தியாருக்காக  தூக்கிவரும் கருங்காலி பயலும் அதே வகுப்பில்தான் இருப்பான்,. அவனுக்கும் மற்ற பயலுகளுக்கும் என்ன வித்தியாசம் என்றால், வாத்தியாரின் அடி  அவனுக்கு கொஞ்சம் லேசா விழும், அதுதான் அவனுக்கான அதிகபட்ச சலுகை.
அதே போன்று ஒவ்வொரு வகுப்பிலும் நன்கு திடகாத்திரமான, உயர்ந்து காணப்படும் நான்கு  பயலுகளுக்கு என  கிளாஸ் வாத்தியார் சில பணிகளை வழங்குவார்.  எந்த பயல் பள்ளிக்கூடம் வராமல் வீட்டில் அடம்பிடித்துக்கொண்டு அழுது கொண்டிருக்கின்றானோ,  அவனை அந்த நான்கு பயலுகள் அவனை தூக்கிக் கொண்டு வரவேண்டும்.
 தூக்கிக் கொண்டு வரும் அவர்கள் பள்ளிக்கு வராது அடம்பிடிப்பவனின் அத்தனை வசவு சொற்களையும் ( தேவிடியா மொவுனுவோளா !  குச்சிகௌகாரி மொவுனே, என்ன வுடுடா, பள்ளிக்கொடம் எனக்கு  வேணாண்டா அய்யோ!  விடுடா )
பொறுத்துக் கொள்ளும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் .

         சின்ன பள்ளிக்கூடம் பக்கத்தில் உள்ள அந்தக் குளம்தான் எங்களுக்கு சிறுநீர்க்கழிப்பறையாக எங்களால் மாற்றியமைக்கப்பட்டது, மேலும் வாத்தியார்களின் பிரம்படிக்கு பயந்தோடும் என்னைப் போன்ற பயலுகளுக்கு,  பக்கத்தில் உள்ள சிவன்கோவில்தான் அடைக்கலம் தந்து நாள் முழுவதும் எங்களை காப்பாற்றும். இதுபோக சில வாண்டுகளின் குறும்பாட்டங்கள் அதிகம்  அரங்கேறும் நேரம் பொதுவாக,
 *காலை பள்ளித் தொடங்கும் முன்பு
*காலை இன்ரோல் பெல்லு ( இன்டர்வெல் பெல்)
*சாப்பாட்டுப் பெல்லு ( மதிய உணவு இடைவேளை )

காலை பள்ளித் தொடங்கும் போது அவனவனும் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிக்காட்ட ஆரம்பிப்பார்கள், பள்ளிக்கூட வாசலை நெருங்கியவுடன் சிலருக்கு வயிற்றுவலி, மயக்கம், வாந்தி உமட்டல் இன்னபிற நடிப்புகள் மூலம் அசத்தி வகுப்புவாத்தியார் அனுமதியோடு வீட்டுக்கு போய்விடுவார்கள்.  மற்றோர் பக்கம் எங்களை விட மூத்த கிளாஸ் மாணவர்கள் சிலர் பக்கத்தில் உள்ள சிவன் கோவிலின் உச்சியில் அடைக்கலமாகி விடுவர், இன்னும் சில வாண்டுகள் சிவன் கோவிலின் முன்னுள்ள நந்தியின் மீதேறி நேரத்தை பங்கிட்டு கொண்டு சவாரி செய்வார்கள், அதிலும் சில விஷமிகள் நந்தியின் காதருகே குனிந்து " எங்க வாத்தியாருக்கு ஜொரம் வந்துடனும் " என்று நந்தியிடம் சிபாரிசு வைப்பர்.
காலை இண்டர்வெல் நேரத்தில் குளத்தின் கரையருகில் உள்ள ஏதாவதொரு சீமை கருவேல மரக் கன்றை தேர்ந்தெடுத்து, அதற்கு நீர் பாய்ச்சுவது போல குச்சியால் நிலத்தை கீறி வாய்க்கால் அமைத்து அந்த வாய்க்காலில் சிறுநீரை பீய்ச்சியடிப்பதும் ஓர் அலாதியான அனுபவமே, ஆனால்  அப்போது இரண்டு பேர்  சிறுநீர் கழிக்கும்போது, மற்றவனுடைய  சிறுநீர் அடுத்தவனுடையதோடு கலந்துவிட்டால், திடிரென ஒருவன் தன் கண் இமை மயிற்றை பிடுங்கி அந்த இடத்தில் போடுவான்.  இது என்ன விதமான சாஸ்திரம் என்று இது நாள் வரை தெரிந்ததில்லை.

இது போன்ற பள்ளிகால நினைவுகளை,  இன்று செயல் தலைவர் தளபதியார் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக தா.பழூர் மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் அண்ணன் திரு. சிவசங்கர் எஸ்.எஸ்
 அவர்கள் தலைமையில் சித்தப்பா
வா.சௌந்தரராஜன் திமுக ஆகியோரோடு ஆறுக்கும் மேற்பட்ட ஊர்களின் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு இன்று அவர்களுடன் பயணித்த போது கடந்த கால நினைவு பக்கங்கள் என்னுள் எழுந்தன, சென்றிருந்த அனைத்து பள்ளி மாணவர்களிடமும் எழுதுபொருட்கள் வழங்கும் போதும், அம்மாணவர்களின் உருவத்துக்கேற்ப குனிந்து கனிவுடன் அப்பிள்ளைகளை நோக்கி  அண்ணன் சிவசங்கர்
அவர்கள் இன்று எதற்காக நோட்டு, பேனா தருகிறோம் தெரியுமா ?  என்பர் அப்பிள்ளைகள் பதில் சொல்லாது கூச்சப்படும் போது
   " திமுக வின் செயல் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மாண்புமிகு. மு.க .ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை உங்களோடு கொண்டாடுகிறோம்" என்று கூறினார்.
அதை நான் அருகே இருந்து கண்ட போது என் மனதில்
" நாம் படித்த போது ஒரு வார்டு கவுன்சிலர் கூட, மெம்பர் கூட எங்களோடு இப்படி பேசியதில்லை, ஆனால் இன்று ஒரு மாவட்டத்தின் செயலாளர், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர், மூன்றாம் முறை எதிரிகளின்  சதியால் வெற்றி வாய்ப்பை இழந்தவர், எழுத்தாளர், அரசியல் நோக்கர் இப்படியான தன்னேரில்லா தலைவர் ஒருவரோடு உரையாடும் வாய்ப்பை பெறும் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்தான்" .

##டொய்ன் டொய்ன் டொய்ன் .
பள்ளிக்கூடம் விட்டாச்சிடோய் .