கரையோர புளியமரம்
எங்க ஊரு ஆண்டேரிக் கரையோரம்
எங்களுக்கோ !
இரண்டு வீட்டுக்கும் பொதுவான ஒரு புளியமரம்.
முப்பாட்டன் வச்ச மரம்
மூன்றுத் தலைமுறையின்
காலடித்தடம் பட்ட இடம்
குளிக்க வரும் சிறுசுகளால்
புளிப்பான பழத்துக்காய்
கல்லடி பட்ட மரம்.
தாடிவீட்டுப் படித்துறை கரையோரம்
செழிப்போடு வளர்ந்த மரம்
இடுப்பழகி நடிகை போல
கொஞ்சம்
கிழக்கு நோக்கி அது சாஞ்சிருக்கும் .
பொன்னிறமாய் பூ பூக்கும்
பார்ப்போர் ரெண்டு கண்ணும் அந்த அழகில்
சொக்கி நிற்கும்
பூவோடு சேர்ந்த இளம்பிஞ்ச
கடைவாயில் கடிச்சாக்க
நாவரும்பு புளிப்பாலே வெட்கப்படும்
பூ கொஞ்சம்,பிஞ்சாகி , வந்த பிஞ்சு கொஞ்சம் காயாகி ,
காயில் கொஞ்சம் பழமாகி ,
அறுவடைக்கு காத்து நிற்கும்
அந்த அறுவடை திருநாளுக்காய்
பொடுசுக நாங்க காத்திருப்போம் .
சின்ன அப்பாயி தலைமையில
சொந்தகார குட்டாறு பெரியப்பா
புளியம்பழம் உலுக்கையில
ரெண்டு சணல் கோணி கொண்டு போவோம்
விழும் பழம் பொறுக்கிப்போட நாலு சின்னக்கூடையும் கொண்டு போவோம் .
உலுக்கிய பழம் சேகரித்து
முட்டாக கொட்டி வைப்போம்
சின்ன அப்பாயி குட்டாறுக்கும் ,
பொறுக்கிய பொடிசுகளுக்கும் ,
கூலி போக
இருக்கும் பழத்தை
சரிசமமாய்
ரெண்டாக பிரிப்பாங்க ,
உலுக்கும் போது
கீழ்விழுந்த காய்ந்த குச்சிகளையும் ரெண்டாகவே பிரிப்பாங்க ,
தலையில சுமந்து வந்து
வீட்டுக்கு கொண்டு சேர்ப்போம்.
அவ்வாறு காய்ச்ச மரம்
ஒருநாளு இடியாலே பட்டுப்போச்சு ,
பள்ளியில படிச்சப்போ
கடைசியா உலுக்கியதா நினைவிருக்கு
காய்ச்ச மரம் இருந்த இடம்
இப்போது வெறுமனாய் காத்திருக்கு.
......சுரேஷ் மணியன் M,A.
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment