Skip to main content

அனிச்சம்


தமிழ் பேசும் உறவுகளுக்கு இனிய காலை/ மதியம் /மாலை /இரவு வணக்கம் ( படிக்கும் நேரத்திற்கேற்ப பொழுதை சேர்த்துப் படிக்கவும்).

""அழகாய் இருப்பவை எல்லாம் 
உன்னை நினைவுபடுத்துகின்றன
உன்னை நினைவுபடுத்துபவை எல்லாம்
அழகாக இருக்கின்றன'' என்ற காதல் கவி தபுசங்கரின் வரிகளைப் போல,                         "" படித்தற்குரியதெல்லாம் ரசனைக்குரியதாய் இருக்கிறது 
ரசனைக்குரியதெல்லாம் படித்தற்குரியதாய் '' இருக்கிறது என்பேன் நான் .  
  அகநூலோ,  புறநூலோ,  அகப்புற நூலோ,  -நீதிநூலோ எவ்வித நூலாயினும் வாழ்வியல் கருத்து நெறிகளைத்தாண்டி இலக்கிய இன்பம் பயக்குகின்ற, இலக்கிய ரசனை தருகின்ற கருத்தமைந்த வரிகள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும், இது திண்ணம். 

          ஆனால் இன்றைய தமிழிலக்கிய மாணவர்களுக்கான  கல்வி முறையில் ரசனை, அழகியல் என்பதை இலக்கியங்களின் துணைக் கொண்டு கற்பிக்கப்படவில்லை, அது போன்ற பாடத்திட்டங்களும் அமைக்கப்படவில்லை ,அப்படியே பாடத்திட்டம் அமைக்கப்பட்டிருந்தாலும், தக்காரால் பயிற்றுவிக்கப்படவில்லை என்றே  சொல்லலாம்..

திருக்குறளில் அறம், பொருள் பயிற்றுவித்த அளவு காமத்துப்பால் பயிற்றுவிக்கப்படவில்லை .காமத்துப்பால்  என்ற சொல்லையே தகாத சொல்லாய் நினைத்து  தணிக்கை செய்து ""இன்பத்துப்பால் '' என்று கூறும்  அதீத அதிமேதாவிகள் அல்லவா நாம். 

காமம் என்ற சொல்லைத் திருத்த நமக்கு யார் உரிமை கொடுத்தது ? 


காமம் என்கிற சொல் வெறுமனே  புணர்ச்சியின்பத்தை மட்டுமே குறிக்கிற சொல்லாக நாம் நினைத்தால் ,அது நம் புத்தியின் தவறே ஒழிய, தமிழின் தவறு அல்ல . 

காமம் ; ஆசை, அன்பு, விருப்பம், இன்பம், புணர்ச்சியின்பம், ஊர், குடி , இறை 
என பல பொருள்களைத் தருகிறது அகரமுதலி.

""கால்லாதான் சொல்காமுறுதல் ''

""தாமின் புறுவது உலகின் புறக்கண்டு 
காமுறுவர் கற்றறிந் தார் ''

"" பலசொல்லக் காமுறுவர் ''

என்பனவான வரிகள் விருப்பம் அல்லது பெருவிருப்பம் என்கிற ஆசையை குறிப்பனவாகவே உள்ளன .


காமம் என்பதிலிருந்தே ""ஊர்''  (Village) கிராமம் தோன்றியது .

இறை என்பதற்கு ஊர் மக்கள் கட்டுகிற வரி எனப் பொருள். ஆக காமம் என்பதிலிருந்தே Come tax வந்திருப்பதையும் நோக்கலாம். 

இலக்கிய ரசனையை முழுதாய் அனுபவித்திட " திருக்குறளை 'கடைசிப்பக்கத்தில் வாசிக்கத் தொடங்க வேண்டும். 

கலிங்கத்துப் பரணியை முதல் பக்கத்தில் இருந்து வாசிக்கத் தொடங்கவேண்டும். 

ஆனால் நம்மவரின் பாட போதனை தலைகீழாக இருக்கிறது.

கலிங்கத்துப் பரணியில் முதலிலுள்ள கடைத்திறப்பை படித்துப் பாருங்கள், புலவரின் ரசனையே அலாதியானதுதான் காடு பாடியது, கோயில் பாடியது, காளி பாடியது என அத்தனை இடங்களிலும் கற்பனை சுவை நனி சொட்ட சொட்ட எழுதியிருப்பார் ஒட்டக்கூத்தர். 

போர்க்களக் காட்சி ஒன்று 


தரைமகள் தன் கொழுநன் உடலந்தன்னைத்

தாங்காமல் தன்னுடலால் தாங்கி விண்ணாட்டு

அரமகளிர் அவ்வுயிரைப் புணரா முன்னம்

ஆவியொடுக்க விடுவாளைக் காண்மின்!  காண்மின்!.

 இதன் பொருள்,  
 
களத்திலே போரிட்டு குற்றுயிரும் குலையுயிருமாயிருக்கிற  இறக்கவுள்ள  தன் உயிருக்கு உயிரான,தனக்கு மட்டுமே உரியவனான  தலைவனின் உடலை பூமி ( நிலமகளாகிய பெண்)  மேல் படாமல் ,தன் மேல் சாய்த்துக் கொண்டு,   விண்ணுலகுக்குப் போன அவனை, அங்கே உள்ள பெண்கள் அவன் உடலை சேர்வதற்கு முன், தன் ஆவியைப் போக்கிக் கொண்டுத் தானும் மேலே செல்கிறாள்.

என்ன ஒரு கற்பனை அடடா ! 


சரி விடயத்திற்கு வருவோம் ,  வள்ளுவரின் ரசனையைப் பார்ப்போம்

திருக்குறளில் அனிச்சமலர் நான்கு இடங்களில் கையாளப்பட்டிருக்கிறது மேலும் அப்பூவின் மென்மை தன்மையை விளக்கும் நோக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது.  மென்மையை சுட்டுவதற்கான பூக்களில் அனிச்சமே தலையாய இடம் வகிக்கிறது .
 நமக்குத் தெரிந்த மென்மைத் தன்மை வாய்ந்த புல் வகை தொட்டாற் சிணுங்கி மட்டுமே 

குறள் : 90
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.


அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது. அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்.

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.

இக்குறளையும்  இணைத்துப் பொருள் கொள்க...

குறள் : 1111
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்


அனிச்சப்பூவே! நல்ல மென்மைத்தன்மை பெற்றிருக்கின்றாய்! நீ வாழ்க! ஆனால்  யாம் விரும்பும் காதலி உன்னைவிட மெல்லிய தன்மை உடையவள்.     (அனிச்சமே தான் மட்டும் Shining னு ரொம்ப பீட்ரு வுட்டு திரியாத )


குறள் 1120:

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.


அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் என் காதலியின்  மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை..( அடேங்கப்பா , pediglow Foot cream லாம் அப்பவே இருந்திருக்கும் போல) 

குறள் : 1115

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை.


அவளுக்காக நல்லபறை ஒலிக்கவில்லை; ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்; காரணம், அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக்கொண்டதுதான்.


மேற்கண்ட கடைசிக் குறளின் அதீத உயர்வு நவிற்சியை பார்ப்போம், அதன் உண்மையான பொருள் என்னவென்றும் பார்ப்போம், பல்வேறு உரையாசிரியர்களின் வேறுபாடுகளையும் பார்ப்போம். 


மு வரதராசன் : அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினாள்; அவற்றால் நொந்து வருந்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.

மணக்குடவர் உரை: அனிச்சப்பூவைக் காம்புகள் அறாது மயிரில் அளைந்தாள்: இனி இவளது நுசுப்பிற்கு நல்லவாக ஒலிக்கமாட்டா பறை.
இஃது இடையினது நுண்மை கூறிற்று.

பரிமேலழகர் உரை: (பகற்குறிக்கண் பூ அணி கண்டு சொல்லியது) 
அனிச்சப்பூக் கால் களையாள் பெய்தாள் - இவள் தன் மென்மை கருதாது அனிச்சப்பூவை முகிழ் களையாது சூடினாள்; நுசுப்பிற்கு நல்ல பறை படா - இனி இவள் இடைக்கு நல்ல பறைகள் ஒலியா.
(அம் 'முகிழ்ப்பாரம் பொறாமையின் இடை முரியும். முரிந்தால், அதற்குச் செத்தார்க்கு உரிய நெய்தற்பறையே படுவது' என்பதாம். மக்கட்கு உரிய சாக்காடும் பறை படுதலும் இலக்கணக் குறிப்பால் நுசுப்பின்மேல் ஏற்றப்பட்டன.)

இரா சாரங்கபாணி உரை: அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலரின் காம்பினைக் கிள்ளியெறியாமல் சூடினாள்; அதனால் வருந்தும் அவளுடைய நுண்ணிய இடைக்குப் பறைகள் மங்கலமாக ஒலியா. (இடை முரிந்து இறந்துபடுவாள். ஆதலின் சாப்பறை ஒலிக்கும் என்பது கருத்து.)




பதவுரை: அனிச்சப்பூ-அனிச்ச மலர்; கால்-காம்பு; களையாள்-கிள்ளாதவளாக, நீக்காமல்; பெய்தாள்-இட்டாள், சூடினாள்; நுசுப்பிற்கு-இடுப்பிற்கு; நல்ல-நன்மையானவற்றை (அறிவிக்கும்); படாஅ-ஒலிக்க மாட்டா; பறை-தோலினால் செய்யப்பட்ட இசைக்கருவி.

ஒரு மென்மைத் தன்மை வாய்ந்த அனிச்சம் பூவை அதன் அடிகாம்பினை நீக்காமல், அவள் தன் தலையில் சூட்டிக் கொண்டாளாம், அதனால் அப்பூவின் பாரம் தாங்காது அவளது மெல்லி இடை ஒடிந்து விடுமாம். அவள் வீட்டில் நல்ல பறை ஒலிக்காது சாதற்கு உரிய சாப்பறை ஒலிக்குமாம்.

மோடி ஆட்சியில் இல்லாத ஐனநாயக மாண்புகளை போல, அவளுக்கும் மிக மிக மெல்லிய சிற்றிடை போல.

மெல்லிடை குறித்துக் கோடம்பாக்கத்து கவிஞர்கள் பார்வையினை பார்ப்போம். 

அன்னை இல்லம் படத்தில் 
கவிஞர் கண்ணதாசன் பாடலில்

""நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது
நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது''

ஜீன்ஸ் படத்தில் கவிப்பேரரசு வைரமுத்து பாடலில் 

""அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி''

ஆதி படத்தில் கவிஞர் யுகபாரதி பாடலில் 

""ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு
ஒத்த விரல் மோதிரம் போதுமடி அதுக்கு''

முதல்வன் படத்தில் வைரமுத்துவின் பாடல் 

"குறுக்கு சிறுத்தவளே '


மேற்கண்ட பாடல்களை இலக்கிய மாணவனாக ,தத்தனூரில் கல்லூரி காலங்களில் முணுமுணுத்ததும் உண்டு.


மேற்கண்ட குறளுக்கு பல்வேறுபட்ட விளக்கம் தருகிற உரைகளைப் பார்த்தோம்.
கண்டிப்பாக வள்ளுவர் அத்தகைய பொருள் தரும்படியான நோக்கில் தலைவியை நேசிக்கிற தலைவன் தன் காதலி இடை ஒடிந்து இறந்து போவாள் என்கிற அமங்கலமான நோக்கில் எழுதியிருக்க வாய்ப்பில்லை.  

பறை என்கிற சொல்லுக்கு "பேசு ' " சொல் ' எனவும் பொருளுண்டு. பறை என்கிற தோற்கருவியை நாம் இங்கே பொருத்திப் பார்க்கக் கூடாது, நல்ல என்பதற்கு நன்மையை தருகின்ற, இனிமையைத் தருகின்ற என்று பொருள்  


அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை.

இதன்(என்)  பொருள் : 

என் காதலி ,அனிச்சப் பூவின் அடிக்காம்புகளைக் களையாமல் அல்லது நீக்காமல் தன் கூந்தலில் வைத்துக்கொண்டாள் அதனால் அவளது மெல்லிடை அந்த சுமை தாங்காது அவள் இடை சுளுக்கிக் கொள்ளும் . அதனால் அவள் நடைகுறித்து நல்ல இன்பம் தருகிற சொற்கள் சில எழாது. அவளுக்கு இடுப்பு வலி என்கிற துயரமான சொற்களே அவள் வீட்டில் எழும். 


அன்போடும், தமிழோடும்; சுரேஷ்மணியன் M A,


 

Comments

Post a Comment

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விளக்கவே , அரண்டு போய் தமிழ

திருவள்ளுவமாலை, கபிலர் பாடல்

அனைவருக்கும் அன்னைத்தமிழ் வணக்கம்.  திருவள்ளுவமாலை 5 ஆம் பாடல் ; கபிலர்  தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி (௫) கருத்துரை வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது?      என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோல ஆகும் சுரேஷ்மணியன் M A , 

திண்ணை

காணாமல் போன திண்ணை. அனைவருக்கும் இனிமையான வணக்கம். இன்றை நவநாகரீக தமிழரின் வாழ்வியல் பயன்பாட்டிலும், அடித்தட்டு சமூக மக்களின்,  கிராமிய வாழ்க்கை பயன்பாட்டிலும் அவர்களாகவே வலிந்து தொலைத்துக் கொண்டிருப்பது " திண்ணை " என்றுதான் சொல்ல வேண்டும். காணாமல் போன தமிழரின் கருவிகளாக  முதன்மையானதாக - அம்மிக்கல்லையும் - மாவு அரைக்கும் குடைக்கல்லையும் -உரலையும் உலக்கையையும் சேர்த்துக்கொள்ளலாம். அரிதினும் அரிதாய் மேற்சொன்ன அடுதலுக்கு ( சமையல் செய்ய உதவிய பொருள்கள் ) பயன்பட்ட பொருள்களை சில கிராமங்களில் பயன்பாட்டில் இருப்பதை காணும் போது ஓர் இனம் புரியாத மகிழ்ச்சியும், பெருமிதமும் தோன்றும். அத்தகைய காணாமல் போன பட்டியலில் நம்மவர்கள் திண்ணையையும் சேர்த்துவிட்டார்கள். `` திண்ணை " இது தமிழரின் வீட்டின் முன்பகுதியில் நிலைக்கதவு எனும் வாசற்படியின் நடைபாதையின் இருமருங்கிலும் ஒன்றரை அடி முதல் உயரம் கொண்டதாய் அமைக்கப்பட்டிருக்கும். திண்ணை பள்ளிக்கூடம், திண்ணைப்பேச்சு, திண்ணையிலே கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துதான் வாழ்க்கை எனும் சொற்கள், சொலவடைகள்  வழி திண்ணையின் பயன்பாட்ட