Skip to main content

மிட்டாய் சண்டை

இரண்டு பேர் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்றால், அவர்களை நாம் விலக்கிவிட  முயலும் போது நமக்கும் கொஞ்சம் அடி விழத்தான் செய்யும்.  ஆனால் எதிரெதிரே இருக்கக்கூடிய  இரண்டு ஸ்வீட் கடைக்காரர்கள் சண்டை போட்டுக் கொண்டால் நமக்குதான் மகிழ்ச்சி வரும்.
   ஏனெனில் ஒருவன் மைசூர்பாக் மிட்டாயை எடுத்து வீசி அடுத்த கடைக்காரனை அடிப்பான், அவனோ ஜிலேபியை எடுத்து இவனை நோக்கி  வீசுவான் இப்படியாக சண்டை நடந்தால் நமக்குத்தான் லாபம் மற்றும் மகிழ்ச்சிதானே ! .
   
மேலே சொன்ன நிகழ்வைப் போல இரு புலவர்கள் கவிதைச் சண்டை போடுகிறார்கள்
ஒருவர் ஒட்டக்கூத்தர் மற்றொருவர் புகழேந்திப் புலவர். இது கண்ணால் பார்த்ததல்ல, கல்லூரியில் படிக்கிற காலத்தில் தத்தனூர் கிளை நூலகத்தில் பழைய நூல்களை எடைப்போட்டு வாங்கிய போது கிடைத்த தனிப்பாடல் திரட்டு எனும் நூலில்  படித்தது என்றுணர்கிறேன். 

கவிப்பேரரசு வைரமுத்து போல் திரைப்படத்திற்கு நீங்கள் ஏன் பாட்டெழுதுவதில்லை?  என கவிக்கோ அப்துல்ரகுமானிடம் ஒரு  பத்திரிகையாளரால் அந்த கேள்வி கேட்கப்படுகிறது,  அந்தக் கேள்விக்கு அவர் கூறிய பதிலில் இருந்து ஒரு இலக்கிய சண்டை அரங்கேற ஆயத்தமாகிறது,  அக்கேள்விக்கு அவர் கூறும் பதில் இதோ! 
" அம்மிக் கொத்த சிற்பி எதற்கு  " என்று முடிக்கிறார்.  அதாவது மலிவான சொற்களை கொண்டு பாடல் எழுதுவது மிகவும் சுலபம், ஒரு பாறையை வெட்டி நீள்சதுர வடிவில் அம்மியினை உருவாக்க கடவுளர் மற்றும் சிற்பங்களை உருவாக்கும் ஒரு கைதேர்ந்த தச்சன் தேவையில்லை, அது அவனது வேலையுமில்லை எனும் பொருளில் கூறி முடிக்கின்றார்.

அவர் கூறிய அந்த பதில் பற்றி கவிஞர் வைரமுத்துவிடமும் கருத்து கேட்கிறார் அந்த பத்திரிகையாளர்,  அதற்கு மிகவும் சுலபமாக ஒரு  மறுபதில் கூறுகிறார் கவிஞர் வைரமுத்து, 
" அம்மி கொத்த சிற்பி எதற்கு " என்று கேட்ட கவிக்கோவை பார்த்து கேட்கிறேன்,
" அம்மியும் கொத்த தெரியாத சிற்பி எதற்கு " என்றாராம் வைரமுத்து. இதுதான் கேட்டோர்க்கும் படிப்போர்க்கும் இன்பம் தரும் இலக்கிய சண்டையாகும்.

இது போன்ற ஒர் இலக்கிய சண்டை நளவெண்பா எழுதிய புகழேந்தி புலவனுக்கும்,  தக்கயாகப்பரணி பாடிய ஒட்டக்கூத்தனுக்கும் இடையே நடைபெறுகிறது.

அது தாமரை குவிய அல்லி மலரும் அந்திப்பொழுது, இடமோ  சோழன் அவைக்களம் ; அவையின் தலைமைப் புலவன் ஒட்டக்கூத்தன் முன்னிலையில் தகைமிகு நளவெண்பா அரங்கேற்றம்.
அரங்கேற்றுபவன் வெண்பாப் புகழ் புகழேந்தி.

அது ஓர் அந்திப்பொழுதல்லவா! புகழேந்திப் புலவனும் அவ்வந்திப் பொழுதைச் சிறப்பித்து ஓர் வெண்பா அரங்கேற்றுகிறான்.

அந்த அந்திப்பொழுதை ஓர் இராச ஊர்வலம் என்று உவமிக்கிறான். அந்த அந்தி எப்படி நடந்து வருகிறதாம்! மல்லிகைப் பூவினையே வெண்சங்காக எண்ணிக்கொண்ட வண்டினங்கள் ஊதிஊதி முழங்குகின்றனவாம். சிறந்த கரும்பாலாகிய வில்லினை உடைய மன்மதன் காம உணர்வைத்தூண்டும் தன் மலர்க்கணைகளைக் கையிலேந்தித் தாக்கிக் காளையர்களுக்கும் மகளிருக்கும் உள்ளக் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறானாம். அவ்வேளையில் முல்லை மலர்களால் ஆன மாலை தன் தோளில் அசைந்தாட ஓர் இராச ஊர்வலம் போல் அவ்வந்தி மெல்லமெல்ல நடந்து செல்கிறதாம்.

பாடலையும் பாடலுக்கானப் பொருளையும் அவைமுன் வழங்கிவிட்டு அனைவரின் மறுமொழிக்காகக் காத்திருக்கிறான் புகழேந்தி.

அவைத் தலைமைப் புலவன் ஒட்டக்கூத்தனுக்குக் கடுங்கோபம். நிறுத்தய்யா உம் பிள்ளைக் கவியை! இப்படியா சொற்குற்றம் பொருட்குற்றம் விளங்கக் கவிபாடுவது? -என்றான்.

புகழேந்திக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. ஒட்டக் கூத்தன் தலைமைப் புலவன். அவன் புலமையைப் பற்றி ஐயுறுவதற்கில்லை. புகழேந்தியும் புலமையில் தாழ்ந்தவனில்லை. என்றபோதும் அவைத் தலைமைப் புலவன் என்ற வகையில் அவன் குறைகண்டுப்பிடித்துக் கூறிவிட்டால் அதை மறுத்துப்பேசும் அளவிற்கு அங்கு யாருக்கும் தமிழறிவும் புலமைச்செருக்கும் இருந்ததில்லை.

புகழேந்தி சற்றே நடுக்கத்துடன் கேட்டான். யாது குற்றம் கண்டீர்?

“மல்லிகைப் பூவினையே சங்காக எண்ணிக்கொண்டு வண்டினங்கள் அவற்றை ஊதுவதாகப் பாடினீர்கள் அல்லவா? அதில்தான் குற்றம் என்கிறேன்.

மலரின் மேற்புறத்தில் அமர்ந்துதான் வண்டுகள் தேனுண்ணும். அப்படி அமர்ந்துத் தேனுண்ணும் காட்சியையே தாங்கள் வண்டு சங்கைப் பிடித்து ஊதுவதாக உவமிக்கின்றீர். மலரின் முன்புறத்தில் அமர்ந்துகொண்டுத் தேனுண்ணும் வண்டின் காட்சியை சங்கின் பின்புறத்தை வாயில் வைத்து ஊதும் காட்சியோடு எப்படி உம்மால் உவமிக்கமுடிந்தது. இது காட்சிப் பிழையல்லவா? காட்சிப் பிழையோடு கூடிய தங்கள் கவியை இவ்வவையில் அரங்கேற்ற இடம்கிடையாது. தாங்கள் வெளியேறலாம்” என்று ஒட்டக்கூத்தன் கண்டிப்பாகக் கூறிவிட்டான்.

அவையெங்கும் மௌனம். தொண்டையைக் கனைத்துக்கொண்டு புகழேந்தி கூறலுற்றான்.

அய்யா! கள் அருந்தியவனின் நிலையென்ன? கள் மயக்கத்தில் தான் என்னசெய்கிறோம் என்னபேசுகிறோம் என்பதுதான் அவனுக்குத்தெரியுமா? இரண்டு கால்கள் இருந்த போதும் அவனால் நிற்கக்கூட முடிவதில்லையே!

அதுபோல்தான் அதிகமாய் மலர்த்தேனை உண்ட மயக்கத்தில் தான் மலர்என்ற வெண்சங்கின் முன்புறத்தைப் பிடித்து ஊதுகிறோமா பின்புறத்தைப் பிடித்து ஊதுகிறோமா என்கின்ற சுயநினைவின்றி வண்டு ஊதிக்கொண்டிருந்திருக்கலாம் அல்லவா? -என்றான் புகழேந்தி.

இப்பொழுது அவையில் இருந்த மற்ற பெரும் புலவர்கள் எல்லாம் புகழேந்தியைப் பாராட்டத்துவங்கிவிட்டார்கள்.

சட்டென்றுத் தாவியெழுந்தான் ஒட்டக்கூத்தன். ஓடிவந்து புகழேந்தியை ஆரத்தழுவிக் கொண்டான். இப்பொழுது புரிகிறதா புகழேந்தி நான் ஏன் உன்கவியில் குற்றம் கூறினேன் என்று? நான் குற்றம் கூறாது விட்டிருந்தால் இப்படியும் ஓர் பொருள் இருப்பது உலகிற்குத் தெரியாமலே போய்விடுமே! ஆதலால்தான் இப்படியோர் நாடகத்தை ஆடினேன் என்றுகூறி மீண்டும் ஆரத் தழுவிக்கொண்டான்.

இத்தனைக் இலக்கிய சண்டையை  ஏற்படுத்தி நமக்கு இலக்கிய இன்பம் தந்த  அப்பாடலைப் பார்ப்போமா?

மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கரும்பு
வில்லி கணைதெரிந்து மெய்காப்ப -முல்லையெனும்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது!

அன்போடு உங்கள் :  சுரேஷ்மணியன் M A ,

Comments

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விளக்கவே , அரண்டு போய் தமிழ

திருவள்ளுவமாலை, கபிலர் பாடல்

அனைவருக்கும் அன்னைத்தமிழ் வணக்கம்.  திருவள்ளுவமாலை 5 ஆம் பாடல் ; கபிலர்  தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி (௫) கருத்துரை வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது?      என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோல ஆகும் சுரேஷ்மணியன் M A , 

திண்ணை

காணாமல் போன திண்ணை. அனைவருக்கும் இனிமையான வணக்கம். இன்றை நவநாகரீக தமிழரின் வாழ்வியல் பயன்பாட்டிலும், அடித்தட்டு சமூக மக்களின்,  கிராமிய வாழ்க்கை பயன்பாட்டிலும் அவர்களாகவே வலிந்து தொலைத்துக் கொண்டிருப்பது " திண்ணை " என்றுதான் சொல்ல வேண்டும். காணாமல் போன தமிழரின் கருவிகளாக  முதன்மையானதாக - அம்மிக்கல்லையும் - மாவு அரைக்கும் குடைக்கல்லையும் -உரலையும் உலக்கையையும் சேர்த்துக்கொள்ளலாம். அரிதினும் அரிதாய் மேற்சொன்ன அடுதலுக்கு ( சமையல் செய்ய உதவிய பொருள்கள் ) பயன்பட்ட பொருள்களை சில கிராமங்களில் பயன்பாட்டில் இருப்பதை காணும் போது ஓர் இனம் புரியாத மகிழ்ச்சியும், பெருமிதமும் தோன்றும். அத்தகைய காணாமல் போன பட்டியலில் நம்மவர்கள் திண்ணையையும் சேர்த்துவிட்டார்கள். `` திண்ணை " இது தமிழரின் வீட்டின் முன்பகுதியில் நிலைக்கதவு எனும் வாசற்படியின் நடைபாதையின் இருமருங்கிலும் ஒன்றரை அடி முதல் உயரம் கொண்டதாய் அமைக்கப்பட்டிருக்கும். திண்ணை பள்ளிக்கூடம், திண்ணைப்பேச்சு, திண்ணையிலே கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துதான் வாழ்க்கை எனும் சொற்கள், சொலவடைகள்  வழி திண்ணையின் பயன்பாட்ட