Skip to main content

நாணம்

யானை வெட்கப்படுவதை பார்த்திருக்கீன்றீர்களா ? 
( அல்லது )
கேள்விப்பட்டுள்ளீர்களா? 

திருக்குறளில் ஒரு தலைவி தன்னுடைய தலைவன் தன்னை பார்ப்பது அறிந்து அவனை  நிமிர்ந்து பார்ப்பதற்கே வெட்கப்படுகின்றாள் என்பதை
நம் திருவள்ளுவ பாட்டன் அழகாக சொல்வார்

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்


இதன் பொருள் யாதெனில், நான்  அவளை நோக்கும்போது அதாவது பார்க்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள்,
நான் நோக்காதபோது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள் அல்லது புன்முறுவல் செய்வாள்.

ஆக ஒரு பெண் தன்னுடைய காதல் வாழ்க்கையின் துவக்க காலத்தின் போது வெட்கத்தின் மூலமாக " உன்னை நான் ஏற்றுக் கொள்கிறேன் " என்பதை விழி மொழியால் அறிவிக்கின்றாள்.

மேற்கண்ட குறளை மையமாகக் கொண்டு
வாழ்க்கைப்படகு எனும் படத்தில
கவியரசு  கண்ணதாசன்
 MSV இசையில் ஒரு பாடலில்


நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே


உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்கின்றாயே

என்று பாடல் எழுதியிருப்பார் .

ஆனால் இங்கே ஒரு ஆண் யானை வெட்கப்படுவதுதான் மிகவும் அலாதியானது .

ஒரு யானை வெட்கப்படுவதை முத்தொள்ளாயிரம் பாடல் ஒன்று அழகோவியமாக எடுத்தியம்புவதை பார்ப்போமா ?

முத்தொள்ளாயிரம் என்பது  மூவேந்தர்கள் உலா வரும்போது,  அந்த மன்னனின் மீது மையல் கொள்ளும் இளம்  பெண்களின் காதல்வயப்பட்ட உணர்ச்சிகளை( கைக்கிளை)   பற்றியதான அகப்பாடல்களை கொண்ட நூல் முத்தொள்ளாயிரம் .

ஒரு மன்னனுக்கு ஆயிரம் பாடல்கள் வீதம் மூன்றாயிரம் பாடல்கள் இருந்ததை நூலின் பெயரில் அறிய முடிகிறது. ( முத்தொள்ளாயிரம் 900 என்றும் 3*900=2700 என்றும் விவாதம் உள்ளது)
 ஆனால் கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 109 அதில் சோழ மன்னன் கிள்ளியின்  யானை பற்றிய பாடலொன்று,
இன்றும் ,அழகான  மனதுக்கு பிடித்த இளம் யுவதியோ இன்ன பிற பெண்கள்  யாரேனும் எதிரில் வந்தால், ஆண்கள் உடனே தம்கலைந்த தலைமுடியை வாரிக்கொள்வதும், முடியை களைத்துக் கொள்வதும்,  சட்டையை சரிசெய்து கொண்டும் ஒப்பனை செய்து கொள்வார்கள். ( தலையில் முடி இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் ? )  இது மனிதருக்கே உரித்தான எதிர்பாலினக் கவர்ச்சி.

சரி, இதற்கும் யானைக்கும் என்ன தொடர்பு?
மாபெரும் போர் முடிந்து சோழ மன்னன் கிள்ளியின் வீரர்கள் நாடு திரும்புகிறார்கள். பட்டத்து யானையும் கொட்டடிக்கு வருகிறது. உள்ளே பெண்யானை இருக்கிறது. ஒரு கற்பனை.

போர்செய்து களைத்த அந்த ஆண் யானை தன்னை ஒரு முறை பார்த்துக் கொள்கிறது. பகை மன்னனின் மதில்மேல் மோதித் தாக்கியதால் தந்தம் உடைந்திருக்கிறது. எதிரி அரசர்களின் மணிமுடிகளை தம் காலினால் இடறியதால் நகங்கள் பழுதுபட்டுள்ளன. இந்தக் கோலத்தோடு எப்படி பெண் யானை முன்னே எப்படி செல்வது என்று வெட்கத்துடன் கொட்டடிக்கு வெளியேயே நின்று விடுகிறதாம் பட்டத்து யானை.
பாடலை பாருங்கள்

கொடிமதில் பாய்ந்திற்ற கோடும், அரசர்
முடி இடறித் தேய்ந்த நகமும் - பிடிமுன்பு
பொல்லாமை நாணிப் புறங்கடைநின்றதே
கள்ளார்தோட்கிள்ளி களிறு.

யானையும் வெட்கப்படும் என்பதை அழகாக பாடும் மொழி நம் செம்மொழி.

அடுத்து கலிங்கத்துப்பரணியின் ஓர் நயமான அகப்பாடலோடு சந்திப்போம்   : 
அன்போடும் தமிழோடும்
சுரேஷ்மணியன்.M,A. 

Comments

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விளக்கவே , அரண்டு போய் தமிழ

திருவள்ளுவமாலை, கபிலர் பாடல்

அனைவருக்கும் அன்னைத்தமிழ் வணக்கம்.  திருவள்ளுவமாலை 5 ஆம் பாடல் ; கபிலர்  தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி (௫) கருத்துரை வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது?      என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோல ஆகும் சுரேஷ்மணியன் M A , 

திண்ணை

காணாமல் போன திண்ணை. அனைவருக்கும் இனிமையான வணக்கம். இன்றை நவநாகரீக தமிழரின் வாழ்வியல் பயன்பாட்டிலும், அடித்தட்டு சமூக மக்களின்,  கிராமிய வாழ்க்கை பயன்பாட்டிலும் அவர்களாகவே வலிந்து தொலைத்துக் கொண்டிருப்பது " திண்ணை " என்றுதான் சொல்ல வேண்டும். காணாமல் போன தமிழரின் கருவிகளாக  முதன்மையானதாக - அம்மிக்கல்லையும் - மாவு அரைக்கும் குடைக்கல்லையும் -உரலையும் உலக்கையையும் சேர்த்துக்கொள்ளலாம். அரிதினும் அரிதாய் மேற்சொன்ன அடுதலுக்கு ( சமையல் செய்ய உதவிய பொருள்கள் ) பயன்பட்ட பொருள்களை சில கிராமங்களில் பயன்பாட்டில் இருப்பதை காணும் போது ஓர் இனம் புரியாத மகிழ்ச்சியும், பெருமிதமும் தோன்றும். அத்தகைய காணாமல் போன பட்டியலில் நம்மவர்கள் திண்ணையையும் சேர்த்துவிட்டார்கள். `` திண்ணை " இது தமிழரின் வீட்டின் முன்பகுதியில் நிலைக்கதவு எனும் வாசற்படியின் நடைபாதையின் இருமருங்கிலும் ஒன்றரை அடி முதல் உயரம் கொண்டதாய் அமைக்கப்பட்டிருக்கும். திண்ணை பள்ளிக்கூடம், திண்ணைப்பேச்சு, திண்ணையிலே கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துதான் வாழ்க்கை எனும் சொற்கள், சொலவடைகள்  வழி திண்ணையின் பயன்பாட்ட