Skip to main content

திண்ணை

காணாமல் போன திண்ணை.

அனைவருக்கும் இனிமையான வணக்கம்.

இன்றை நவநாகரீக தமிழரின் வாழ்வியல் பயன்பாட்டிலும், அடித்தட்டு சமூக மக்களின்,  கிராமிய வாழ்க்கை பயன்பாட்டிலும் அவர்களாகவே வலிந்து தொலைத்துக் கொண்டிருப்பது " திண்ணை " என்றுதான் சொல்ல வேண்டும்.

காணாமல் போன தமிழரின் கருவிகளாக  முதன்மையானதாக
- அம்மிக்கல்லையும்
- மாவு அரைக்கும் குடைக்கல்லையும்
-உரலையும் உலக்கையையும் சேர்த்துக்கொள்ளலாம்.

அரிதினும் அரிதாய் மேற்சொன்ன அடுதலுக்கு ( சமையல் செய்ய உதவிய பொருள்கள் )
பயன்பட்ட பொருள்களை சில கிராமங்களில் பயன்பாட்டில் இருப்பதை காணும் போது ஓர் இனம் புரியாத மகிழ்ச்சியும், பெருமிதமும் தோன்றும்.

அத்தகைய காணாமல் போன பட்டியலில் நம்மவர்கள் திண்ணையையும் சேர்த்துவிட்டார்கள்.
`` திண்ணை " இது தமிழரின் வீட்டின் முன்பகுதியில் நிலைக்கதவு எனும் வாசற்படியின் நடைபாதையின் இருமருங்கிலும் ஒன்றரை அடி முதல் உயரம் கொண்டதாய் அமைக்கப்பட்டிருக்கும்.

திண்ணை பள்ளிக்கூடம்,

திண்ணைப்பேச்சு,

திண்ணையிலே கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துதான் வாழ்க்கை
எனும் சொற்கள், சொலவடைகள்  வழி திண்ணையின் பயன்பாட்டை நாம் ஒருவாறாக  யூகித்தறியலாம்.
 திண்ணையை அக்கால Reception room ( வரவேற்பு அறை)
என்றுகூட சொல்லலாம்.

எங்கள்  ஊர் சுத்தமல்லியில் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் திண்ணை இல்லாத வீடுகளை பார்க்கமுடியாது, அந்த அளவுக்கு திண்ணைகள் இருந்தன.  ஆனால் இன்றோ திண்ணை இருக்கும் வீடுகளை பார்க்க முடியாது. இது தமிழகம் முழுக்க பொருந்தும்.

திண்ணை என்பது  வீட்டிற்கு வரும் உறவினர்களோ , அறிமுகமற்றவர்களோ முதலில் அமரும் இடம் ஆகும் .மேலும் வீட்டாரின் அரவமில்லாத வேளைகளில் வழிப்போக்கர்கள் இளைப்பாறும் இடமும் கூடவாக பயன் தரும்.
ஒருவரை திண்ணையில் மட்டுமே  அமர்த்தி பேசி வழியனுப்பினால் அவர் அவ்வீட்டாருக்கு அறிமுகமில்லாதவர், ஓரளவு மட்டுமே பழக்கம் உடையவர் என்பதை காட்டும் உறவு அளவீட்டு கருவி எனவும் அறியலாம்.

  எங்கள் வீடு கிழக்கு பார்த்த நாட்டு ஓடு வீடு, அதில் வீட்டின் தெற்கு பகுதியில் ரோட்டை பார்த்தவாறு சுவரை ஒட்டியவாறு ஒரு அடி உயரத்தில் பதினைந்து  அடி நீளத்தில் திண்ணை இருக்கும்.  அந்த இடம் காலை மாலை  வேலையில் பரபரப்பாகவும், பேச்சரவம் நிறைந்ததாக இருக்கும்.  என் தாத்தா பேரு வே .ராஜகோபால் எல்லோரும் ராசகோவாலு என்பர், சிலர் ஆங்கிலத்தில் சுருக்கி VR என்பார்கள். இந்த மனுசனுக்கு தெரியாமல் ஊரில் யாரும் நிலத்தை வாங்கவோ, விற்பனை செய்யவோ மாட்டார்கள் .நிலத்தை விலை பேசி, நில அளவு அளந்து, ரிஜீஸ்ட்டர் ஆபிசில் பத்திரம் எழுதுவது வரை இவரையே நாடுவார்கள்.

ஊருக்குள் ஏதேனும் தகராறு என்றால் அதை பஞ்சாயத்து பேசி தீர்ப்பதற்கு என்று பழைய பிரசிடன்ட் ரங்கசாமி, கணக்குபிள்ளை வாசுதேவன், தலையாட்டி ராமர், நொண்டி நாட்டார், சீரணி கந்தசாமி, பூனை என்ற தாத்தா இது போன்ற  சில பெருசுகள் இருக்கும், அதில் என் தாத்தா VR இல்லாமல் கூட்டம் எங்கள் வீட்டு திண்ணையில்  கூடாது, அந்தளவுக்கு  முக்கியமானவர்.  இது போன்ற இன்ன பிற காரியங்களில் என் வீட்டு திண்ணை களைகட்டும் .

நான் அப்போது கொஞ்சம் பொடுசு அதாவது சின்ன பையன், தூங்கி வழிந்தவாறே என் தாத்தா மடியில்  அமர்ந்து அந்த பஞ்சாயத்துகளை பார்த்த ஞாபகம் மனத்திரையில் வந்து போகிறது. அந்த திண்ணையில்தான் என் தாத்தா  சாப்பிடும் நேரம் தவிர, பகல் பொழுது முதல் இரவு தூக்கம் வரை கட்டில் போட்ட அந்த திண்ணை  அவருக்கானது.  அந்த இடத்தை தவிர வேறு இடத்தில் அவர்  தூங்கி நான் பார்த்ததில்லை. (மருத்துவமனையை தவிர)
 அந்தி நேரத்திலேயே திண்ணையை பெருக்கிவிட்டு ஒரு பெரிய சொம்புடன் குடம் நிறைய நீர் இருக்கும், கத்தி கத்தி பேசி தொண்டை வறண்டு போனால் நாவறட்சியை போக்கிடவும், வெற்றிலை புகையிலை போடுபவர்கள் காறியை பிச்சிக் பிச்சிக்  என்று எச்சியை துப்பிவிட்டு வாய் கொப்பளிப்பதற்கும் அந்த நீர் பயன்படும்.

யார் ? யார் மீது? குற்றம் சாட்டி பஞ்சாயத்தை கூட்டினார்களோ அந்த இருவர் மட்டுமின்றி இரு குடும்பத்து சொந்தக்காரர்கள், பங்காளிகள், பொடுசுகள், வாண்டுகள் என அனைவரும் வந்து விடுவர்.
 சில நேரங்களில் கைகலப்பும் ஏற்பட்டுவிடும்,அந்த இக்கட்டான நேரத்தில் ஏதோ ஒரு பெருசின் அதட்டலான பேச்சுக்கு மந்திரமாய் கட்டுப்பட்டு அடங்கிப்போவர்.  ( அது அந்தக் காலம் )

பஞ்சாயத்தின் தீவிரம்,மற்றும்  கூடும் கூட்டத்தின் மனித தலைகளுக்கு ஏற்ப எங்கள் சின்னதாத்தா  வீட்டு திண்ணையிலும் கூட்டம் கூடும். அந்த வீட்டில் சித்தப்பா ராஜேந்திரன் மேற்கே புதுவீடு ரைஸ்மில் கட்டி அங்கே போனது முதல் அடிக்கடி அவ்வீட்டு திண்ணை மனிதத்தலைகளால் நிரையும்.
விடுமுறை நாட்களில் தெரு வாண்டுகள் அங்கேதான் டேரா போட்டு விளையாடும். திண்ணையிலும் திண்ணை அருமையான திண்ணை. சிமெண்ட் சுவருடன், நாட்டு ஓடு வேய்ந்து மூன்று அடி உயரத்தில் உள்வீட்டுக்கும் மேலான பரப்பளவில் அமைந்த சிமெண்ட் திண்ணை அது.
கடும் கோடையிலும் அவ்ளோ குளிர்ச்சியா இருக்கும், தாத்தாவும் பகல் பொழுதுகளை அங்கேதான் கழிப்பார்.தாத்தா குடிக்கும் பூட்டு மார்க்  சுருட்டின்  புகை மணம் சூழ்ந்த அந்த குளிர்ச்சியான திண்ணை இன்னும் என்னுள்ளுள் அகலவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இரவு வேளையில் அக்கம் பக்கத்து பெண்கள் கூடி ஊர்க்கதை பேசும் இடமாக, பிள்ளைகள் படிக்குமிடமாக, கோடை காலங்களில் தென்காற்று வீசுகையில் இளைப்பாறும் இடமாக ,நிலா வெளிச்சத்தை பார்த்தவாறு விளக்கினை ஏற்றிவைத்துக்கொண்டு சோறு உண்ணும் இடமாக, அறுவடைக்காலங்களில் தானியங்களை மூட்டைகளாக கட்டி அடுக்கி வைக்கும் இடமாகவும் திண்ணைகள் மாறும்.

   சின்ன தாத்தாவின் மூத்த மகன் பெயர் ராஜேந்திரன், அவர் அதிமுக காரர் : சட்டமன்ற, உள்ளாட்சி  தேர்தல் காலங்களில் அந்த சின்ன தாத்தா வீட்டுத் திண்ணை அதிகாரபூர்வ அதிமுகவின் தேர்தல் மைய இடமாக மாறும், அஸ்திர வியூகங்களும் இங்கேதான் வகுக்கப்படும். அப்போதெல்லாம் தெருவில் போவோருக்கும் வருவோருக்கும் அந்த திண்ணை  சுண்டல் மழையாய் பொழியும். இப்போது ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பு வகித்த சம்பத்தின் அப்பா ரங்கசாமி திமுக தீவிர தொண்டர், அத்தோடு அக்கால பிரசிடெண்டாக இருந்தவர், அவர் வீட்டு திண்ணையிலும் திமுக தேர்தல் வியூகங்கள் வகுக்கபடும், சில ஊர்ப்பஞ்சாயத்தும் குறைந்த அளவில் கூடும்.

அந்த நேரத்தில் அந்த சின்ன தாத்தா வீட்டு திண்ணையை சற்றே புறக்கணித்துவிடுவேன் …காரணம் ஏனெனில் அந்த அம்மா கட்சி விசுவாசிகள்,
என் அப்பா திமுக என்பதால் என்னையும் சேர்த்து
 " ஓட்டுதான் போடமாட்டீங்க, சுண்டலாவது தின்னு பாரு" என நையாண்டி செய்வார்கள் .
    இப்படியான அந்த திண்ணையும், பல விதமான வீடுகளின் திண்ணைகள்  சுவாரசியமானது .
கூரை வீடுகளிலும்அப்போது திண்ணை இல்லாமல் இல்லை என்றுதான் கூறியே ஆகவேண்டும், கூரை வீட்டு மண் திண்ணையில் அமர்ந்தாலோ வியர்வையுடன் ஆடையற்ற மேலுடலுடன் படுத்தாலோ சாணத்தால் மெழுகப்பட்ட மண்ணின் மேற்பகுதி உடலோடு ஆங்காங்கே ஒட்டிக்கொள்ளும்.அதிலும் சிலர் வீட்டுப் பெண்கள் கடலைசெடியை எரியவிட்டு அந்தக்கரியை சாணத்துடன் சேர்த்து கரைத்து  மணியாசி கல் கொண்டு இத்து மெழுகப்பட்ட திண்ணை சும்மா கருகருன்னு மின்னும்,
அப்புடி ஒரு கருப்பாக கருக்கும். குறி கேட்பது,
கைரேகை ஜோசியம்,
கிளி ஜோசியம் பார்ப்பது,
 தாயம்,
ஆடுபுலிஆட்டம்,
பல்லாங்குழி விளையாட்டு  போன்ற இன்ன பிற இத்யாதிகள் பெரும்பான்மை ஆண்களின் பெருத்த ஆராவாரமற்ற தெருவின் ஏதோ ஒரு கூரை வீட்டு திண்ணையில்தான் நடக்கும். சில வீட்டுத்திண்ணைகளில் சில வயதான பெருசுகள் பொடிப்பசங்களை அனுமதிக்காமல்  திண்ணைக்கும் காவலாகவும் இருப்பார்கள்.

மேலும் அவரவரின் பொருளாதார வளங்களின் ஏற்ப வீட்டு திண்ணையின் அமைப்பு நேர்த்தியும் மாறுபடும்.சின்ன வீடு எனில் சிறிய திண்ணை ,பெரிய வீடு எனில் பெரிய திண்ணை  .

சித்தப்பா நம்பிராஜ் அவர்களின் பழைய ஓட்டு வீட்டுதிண்ணை கொஞ்சம் சொகுசான முறையில் இருக்கும் முதுகை வைத்து சாய்ந்து படுக்கும் வகையிலான சுவற்றை ஒட்டி சாய்வு திண்டு அங்கே இரண்டு உண்டு, எறவானத்தை தாங்குகின்ற தூண் அடிப் பருத்தும் நுனி சிறுத்தும் தச்சரின் கை உளியால் வழவழ என்று செதுக்கப்பட்டிருக்கும்.  அந்த திண்டில் முதுகை வைத்து சாய்ந்து படுத்து இருக்கால்களையும் பிணைத்து அந்த தூணை உந்தியவாறு சித்தப்பா நம்பிராஜ் அவர்களின் தந்தை, தாத்தா மாரிமுத்து அவர்கள்  தினமணி நாளிதழ் படித்துகொண்டிருப்பதையும் நான் பார்த்திருக்கிறேன். அந்த தெரு இளவட்டங்களின் பகல் பொழுது அந்த திண்ணையில் வேடிக்கை பேச்சுடனும் சில நேரம் கழியும்.

இப்படியான திண்ணை கலாச்சாரம் மெல்ல மெல்ல நம்மில் இருந்து நாமே அழித்து வருகிறோம். ஓட்டுவீடு, கூரைவீடு  முதல் மாடிவீடு வரை திண்ணையை இடித்து புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது . அன்று அறிமுகமற்ற ஒருவரை நாம் சந்திக்க சென்றால் அவர் வீட்டினுள்ளே இருந்து வெளியே வரும்வரை திண்ணையில் காத்திருந்தோம்.
இன்றோ காலிங்பெல்லை அழுத்திவிட்டு ஒற்றைக்கால் தவமேற்கின்றோம்.

 இடவசதியை கருத்தில் கொண்டு என்வீட்டுத் திண்ணை அண்மை ஆண்டில் இடிக்கப்பட்ட போது இனம் புரியாத சோகம் என்னை விழுங்கியது, செல்போன் இருந்தும் அன்றைக்கு அந்த திண்ணையை ஏன் போட்டோ எடுக்காமல் போனேன் அப்படியென்ற நினைப்பும் அடிக்கடி அந்த திண்ணையற்ற வெற்றிடத்தை பார்க்கும் போது மனதில் தோன்றும்,
போட்டோ எடுத்திருந்தால் அடுத்த தலைமுறைக்கு அந்த திண்ணையை காட்டி கதை கூறிக்கொண்டு இருக்கலாமே என்று .

#பெருசுகளின் பேச்சரவம் கேட்டிலையோ !
அன்போடு :சுத்தமல்லி  சுரேஷ்மணியன்

Comments

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விளக்கவே , அரண்டு போய் தமிழ

திருவள்ளுவமாலை, கபிலர் பாடல்

அனைவருக்கும் அன்னைத்தமிழ் வணக்கம்.  திருவள்ளுவமாலை 5 ஆம் பாடல் ; கபிலர்  தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி (௫) கருத்துரை வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது?      என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோல ஆகும் சுரேஷ்மணியன் M A ,