காணாமல் போன திண்ணை. அனைவருக்கும் இனிமையான வணக்கம். இன்றை நவநாகரீக தமிழரின் வாழ்வியல் பயன்பாட்டிலும், அடித்தட்டு சமூக மக்களின், கிராமிய வாழ்க்கை பயன்பாட்டிலும் அவர்களாகவே வலிந்து தொலைத்துக் கொண்டிருப்பது " திண்ணை " என்றுதான் சொல்ல வேண்டும். காணாமல் போன தமிழரின் கருவிகளாக முதன்மையானதாக - அம்மிக்கல்லையும் - மாவு அரைக்கும் குடைக்கல்லையும் -உரலையும் உலக்கையையும் சேர்த்துக்கொள்ளலாம். அரிதினும் அரிதாய் மேற்சொன்ன அடுதலுக்கு ( சமையல் செய்ய உதவிய பொருள்கள் ) பயன்பட்ட பொருள்களை சில கிராமங்களில் பயன்பாட்டில் இருப்பதை காணும் போது ஓர் இனம் புரியாத மகிழ்ச்சியும், பெருமிதமும் தோன்றும். அத்தகைய காணாமல் போன பட்டியலில் நம்மவர்கள் திண்ணையையும் சேர்த்துவிட்டார்கள். `` திண்ணை " இது தமிழரின் வீட்டின் முன்பகுதியில் நிலைக்கதவு எனும் வாசற்படியின் நடைபாதையின் இருமருங்கிலும் ஒன்றரை அடி முதல் உயரம் கொண்டதாய் அமைக்கப்பட்டிருக்கும். திண்ணை பள்ளிக்கூடம், திண்ணைப்பேச்சு, திண்ணையிலே கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துதான் வாழ்க்கை எனும் சொற்கள், சொலவடைகள் வழி திண்ணையின் பயன்பாட்ட...