Skip to main content

குறும்பு மந்தி


தோழி ____ இந்த வார்த்தை சங்ககாலத்திலும், சமகாலத்திலும் தவிர்க்கமுடியாததாகும்.
அதிலும் சங்க இலக்கியத்தில் தோழி என்பவள் தலைவியின் சிறுவயது முதலே உடனிருந்து பழகி தலைவிக்கு மிக்க உறுதுணையாகவும், களவு வாழ்வில் தலைவி  ஈடுபடும்  போதும் ,தலைவன் பிரிவால் வாடும் தலைவிக்கு ஆறுதல் கூறுபவளாக, நல்லது கூறி ஆற்றுபடுத்துபவளாக  தலைவியை பிரிந்து செல்லும் தலைவனுக்கு  அறவுரை கூறுபவளாக, தலைவி கற்பு வாழ்க்கையில் ஈடுபட்டிட அறத்தொடு நிற்கும் முதல் கருவியாக தோழியே திகழ்கிறாள்.  அகப்பாடல்களில் தோழி என்னும் பாத்திரத்தை தவிர்க்க நேர்ந்தால் அகப்பாடல்களின் சுவை முற்றாக இழக்க நேரிடும், அத்தகைய முறையில் புலவர்களால் உருவாக்கப்பட்டதே இப்பாத்திரம். அதிலும் தோழிக்கூற்று வழியாக பல வாழ்வியல் கூறுகளை  பல இனிமையான இயற்கை நிகழ்வுகளோடு இயைந்த பாடல்களை  படிக்குந்தோறும் ஒருவகையான இலக்கிய இன்பத்திற்கு ஏது நிகர்.

நற்றிணையில் பொதும்பில் கிழார் எனும் புலவரின் பாடலொன்றில், பலகாலமாக தலைவன் ஒருவன்  தலைவியை காதலித்து இன்பம் தூய்த்து வருகிறான். பகல் பொழுதில் திணைப்புனத்தில்  திணையுண்ண வரும் கிளிகளையும், குருவிகளையும்  விரட்டிக் காத்துவரும்  தலைவியை காண திணைப்புணம் நோக்கி வருகிறான்.
( தலைவன் தலைவியை சந்திக்கும் இடம் பகற்குறி எனவும் இரவில் சந்திக்கும் இடம் இரவுக்குறி எனவும் இலக்கியத்தில் கூறுவர் )

தலைவிக்கோ தலைவன் மீது சிறுகோபம், ஏனென்றால் வாழ்க்கைக்கு தேவையான பொருளை ஈட்டி, அதன் பிறகு  தன்னை தன் வீட்டாரிடம் பெண் கேட்டு திருமணம் செய்யாது காலம் நீட்டிக்கின்றானே என்று. ஆனால் தோழி அதனை ஒருவாராக யூகித்து அறிந்து கொண்டு,  தலைவன் திணைப்புனம் அருகே வந்தவுடன், தலைவியின் அன்புக்குரிய தலைவனே ! நான் சொல்வதைக் கொஞ்சம் கேள்.

வளைந்த கொம்புகளையுடைய காட்டுப்பசு ஒன்று சிங்கம் முதலிய விலங்குகளின் கூட்டம் நிறைந்துள்ள ஒரு வேங்கை மரத்தடியில் மிகுதியாக உண்ட களைப்பில் தன் கன்றோடு தங்கி தூங்கிக் கொண்டிருந்தது.
அப்போது பஞ்சு போன்ற தலையை உடைய மந்தியானது கல்லென ஒலிக்கும் தன் தன் சுற்றத்தை நோக்கி சத்தம் எழுப்பாதவாறு கையமர்த்தி விட்டு, அந்த பசு தூங்கிக்கொண்டிருக்கும் இடத்தை அடைந்து, பால் நிரம்பி பருத்திருந்த அப்பசுவினது மடியினை அழுந்தும்படி பற்றி இழுத்து இனிய பாலைக் கறந்து தன் தொழிலான மரத்திற்கு மரம்விட்டு தாவுதல், இரை தேடுதல் போன்ற இன்னபிற தொழிலைக் கல்லாத குட்டியின் கை நிறைய பிழிந்து தரும் . இப்படிப்பட்ட பெரிய மலைகளை உடைய நாட்டிற்குத் தலைவனே!

 சிவந்த தண்டினையும் வளைந்த கதிர்களையும் கொண்ட சிறிய திணைப் பயிரையும் உடைய அகன்ற புனைத்திணமானது கதிர்களை அறுவடை செய்யும்  பருவத்தை நெருங்கும் போது  எம்முடைய. தலைவியின் பேரழகானது  அவள் உடலை விட்டு  கெட்டழிவது உறுதி. ஏனெனில் திணைப்புனத்தை காவல் காக்க போகிறோம் என்று சொல்லிவிட்டு வந்து தலைவி உன்னை சந்தித்து மகிழ்கிறாள். அறுவடை தொடங்கிவிட்டால் நாங்கள்  தலைவி வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு  வீட்டாரால்  அடைக்கப் படுவாள். அப்போது உன்னையே நினைத்து நினைத்து அவள் நலம் கெட்டுவிடும் இது உறுதி .
அதனை நினைக்கும் போது என் நெஞ்சம் கலக்கம் உடையதாய் ஆகிறது. ஆகவே தலைவனே நீ விரைந்து வந்து மணந்து கொள்வாயாக. "என்கிறாள்.
 மேலே தோழி கூறிய அந்த உரையாடலில் மந்தி குறித்த ஒரு நகைப்பூட்டும் செய்தியும் வந்துபோகிறது, நமக்கும் ஓர் நகைப்பும் இன்பமும் உண்டாகிறது. ஆனாலும் மந்தி  குறித்த அச்செய்திக்கு பின்னே
இலக்கிய நயமான  செய்தியை  தோழி தலைவனுக்கு கூறியுள்ளாள்.

தலைவனே !
மந்தி கொடிய விலங்கிற்கு அஞ்சாது பசு இருக்குமிடம் சென்று பாலைப் பிழிந்து ஊட்டிக் குட்டியைக் காப்பது போல, நீயும் பொருளீட்டி வந்து கொடுத்து தலைவியாகிய  இவளையும் மணந்து பாதுகாப்பாயாக. என்று கூறியிருக்கின்றாள். இத்தகைய பொருள் பொதிந்த சங்கப்பாடல் இதோ உங்கள் பார்வைக்கு


தடங்கோட்டு ஆமான் மடங்கல் மாநிரைக்
குன்ற வேங்கைக் கன்னொடு வதிந்தெனத்
துஞ்சுபதம் பெற்ற துய்த்தலை மந்தி
கல்ல்ர்ன் சுற்றம் கைகவியாக் குறுகி
வீங்குசுரை ஞெமுங்க வாங்கித் தீம்பாற்

கல்லா வன்பறழ் கைந்நிலை பிழியும்
மாமலை நாட மருட்கை உடைத்தே
செங்கோல் கொடுங்குரல் சிறுதினை வியன்புனம்
கொய்பதம் குறுகும் காலையெம்
மையீர் ஓதி மாண்நலம் தொலைவே.


_____ நற்றிணை.


அன்போடும் தமிழோடும் :

  1. சுரேஷ் மணியன். 

Comments

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விளக்கவே , அரண்டு போய் தமிழ

திருவள்ளுவமாலை, கபிலர் பாடல்

அனைவருக்கும் அன்னைத்தமிழ் வணக்கம்.  திருவள்ளுவமாலை 5 ஆம் பாடல் ; கபிலர்  தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி (௫) கருத்துரை வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது?      என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோல ஆகும் சுரேஷ்மணியன் M A , 

திண்ணை

காணாமல் போன திண்ணை. அனைவருக்கும் இனிமையான வணக்கம். இன்றை நவநாகரீக தமிழரின் வாழ்வியல் பயன்பாட்டிலும், அடித்தட்டு சமூக மக்களின்,  கிராமிய வாழ்க்கை பயன்பாட்டிலும் அவர்களாகவே வலிந்து தொலைத்துக் கொண்டிருப்பது " திண்ணை " என்றுதான் சொல்ல வேண்டும். காணாமல் போன தமிழரின் கருவிகளாக  முதன்மையானதாக - அம்மிக்கல்லையும் - மாவு அரைக்கும் குடைக்கல்லையும் -உரலையும் உலக்கையையும் சேர்த்துக்கொள்ளலாம். அரிதினும் அரிதாய் மேற்சொன்ன அடுதலுக்கு ( சமையல் செய்ய உதவிய பொருள்கள் ) பயன்பட்ட பொருள்களை சில கிராமங்களில் பயன்பாட்டில் இருப்பதை காணும் போது ஓர் இனம் புரியாத மகிழ்ச்சியும், பெருமிதமும் தோன்றும். அத்தகைய காணாமல் போன பட்டியலில் நம்மவர்கள் திண்ணையையும் சேர்த்துவிட்டார்கள். `` திண்ணை " இது தமிழரின் வீட்டின் முன்பகுதியில் நிலைக்கதவு எனும் வாசற்படியின் நடைபாதையின் இருமருங்கிலும் ஒன்றரை அடி முதல் உயரம் கொண்டதாய் அமைக்கப்பட்டிருக்கும். திண்ணை பள்ளிக்கூடம், திண்ணைப்பேச்சு, திண்ணையிலே கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துதான் வாழ்க்கை எனும் சொற்கள், சொலவடைகள்  வழி திண்ணையின் பயன்பாட்ட