தோழி ____ இந்த வார்த்தை சங்ககாலத்திலும், சமகாலத்திலும் தவிர்க்கமுடியாததாகும். அதிலும் சங்க இலக்கியத்தில் தோழி என்பவள் தலைவியின் சிறுவயது முதலே உடனிருந்து பழகி தலைவிக்கு மிக்க உறுதுணையாகவும், களவு வாழ்வில் தலைவி ஈடுபடும் போதும் ,தலைவன் பிரிவால் வாடும் தலைவிக்கு ஆறுதல் கூறுபவளாக, நல்லது கூறி ஆற்றுபடுத்துபவளாக தலைவியை பிரிந்து செல்லும் தலைவனுக்கு அறவுரை கூறுபவளாக, தலைவி கற்பு வாழ்க்கையில் ஈடுபட்டிட அறத்தொடு நிற்கும் முதல் கருவியாக தோழியே திகழ்கிறாள். அகப்பாடல்களில் தோழி என்னும் பாத்திரத்தை தவிர்க்க நேர்ந்தால் அகப்பாடல்களின் சுவை முற்றாக இழக்க நேரிடும், அத்தகைய முறையில் புலவர்களால் உருவாக்கப்பட்டதே இப்பாத்திரம். அதிலும் தோழிக்கூற்று வழியாக பல வாழ்வியல் கூறுகளை பல இனிமையான இயற்கை நிகழ்வுகளோடு இயைந்த பாடல்களை படிக்குந்தோறும் ஒருவகையான இலக்கிய இன்பத்திற்கு ஏது நிகர். நற்றிணையில் பொதும்பில் கிழார் எனும் புலவரின் பாடலொன்றில், பலகாலமாக தலைவன் ஒருவன் தலைவியை காதலித்து இன்பம் தூய்த்து வருகிறான். பகல் பொழுதில் திணைப்புனத்தில் திணையுண்ண வரும்...