Skip to main content

அம்பிகாபதி

தந்தை மகற்கு ஆற்றிய உதவி :


உலக இலக்கியங்கள் வழி நாம் அறியும் உன்னதமான காதல் ஜோடிகள்
ரோமியோ ஜூலியட்
லைலா மஜ்னு
 இவ்வாறான இன்ன பிறர். ஆனால் தமிழின் தனிப்பாடல்கள் வழியாக நம் பாட்டன்
கம்பருக்கு அம்பிகாபதி என்ற மகன் இருந்ததாகவும், அவன் சோழ மன்னனின் மகளான இளவரசி அமராவதியை காதல் செய்ததாகவும், அந்தக் காதலே அவன் ஆவி பறிபோவதற்கு காரணமாகவும் இருந்ததாகவும் அறிய முடிகிறது . அறிஞர் பெருமக்கள் கம்பருக்கு மகன் இருந்து அவன் சோழ மன்னனால் கொல்லப்பட்டான் என்பதற்கான ஆதாரங்களை, தரவுகளை, யூகங்களை கம்பராமாயணத்தின் வழி விளக்க முயற்சித்துள்ளனர்.  அதாவது ராமனை பிரிந்த தசரதனின் அழுகைக்கும், இந்திரஜித் மாண்ட போது ராவணின் அழுகைக்கும் இடையே நிரம்ப வித்தியாசம் காணப்படுகிறது.  ராவணன் அழும் போது கம்பனே ராவணணாக மாறி அழுவது போன்ற துன்பியல் உணர்வைக் காண முடிகின்றது என்பர்.

கல்லூரியில் நான் தமிழிலக்கியம் பயில ஆரம்பித்த தொடக்க காலத்தில் எம் ஊரான  "சுத்தமல்லி " யை சேர்ந்த திருச்சி தேசிய கல்லூரியில் இயற்பியல் பயின்ற, இன்றும் அதிமுக வில் பொறுப்பு வகிக்கும் என் உறவுமுறை மாமனான முருகன் அவர்கள் முதன் முதலில் அம்பிகாபதி அமராவதி காதல் குறித்து , அவரின் தமிழ் பேராசிரியர் விளக்கியதை எனக்கும் சுவைபடக் கூறினார். கம்பனை நான் காதலிப்பதற்கும், கம்பனுக்காக நான் ஏங்கித் தவிப்பதற்கும் அவரும் ஒரு காரணகர்த்தா என்பேன்.
சரி விடயத்திற்கு வருவோம்.

சோழ மன்னனின் அவைக்களப் புலவராக கம்பர் விளங்கிய போது, அவர் கூடவே அம்பிகாபதியும் அரண்மனை சென்று வரும் போது அமராவதியை காணும் வாய்ப்பை பெற்றான், இவ்வாறாக அமராவதியின் அழகில் சொக்கிப் போய் காதல் கொண்டு அவள் நினைவை உண்டு, கவிதைக் கோலங்களை தீட்டித் தள்ளுகிறான் அம்பிகாபதி . புலிக்கு பிறந்தது பூனையாகுமா ?

ஒரு நாள் தந்தையுடன் அரண்மனை செல்கிறான் அம்பிகாபதி.  அரசவையின் அத்தாணி மண்டபத்தில் சோழ மன்னன் வீற்றிருக்க . கம்பன், ஒட்டக்கூத்தன்,  உள்ளிட்ட புலவோர் தம் கவிதைகளால் அவையை நிரப்புகின்றனர்.
அம்பிகாபதியின் கண்களோ  அமராவதியை தேடுகிறது.  வில்லெடுத்து வீசும் சோழன்,  சொல்லெடுத்து வீசி களைத்துப்போன புலவோர் உண்பதற்காக சிற்றுண்டி எடுத்து வர அமராவதியை பணிக்கின்றான்.
பச்சை தேங்காயின் காய்கள் இரண்டை தன் கச்சைக்குள்ளே கட்டி வைத்தவளாய், இல்லை எனும் இடையை உடையவளாய், அங்கமெல்லாம் வெளியே தெரியும் மெல்லிய பட்டுடை உடையவளாய் திண்பண்டம் தாங்கி, தத்தித் தத்தி  வருகிறாள் அம்பிகாபதிக்கு அத்தையாகப் போகுபவள் பெற்ற தத்தை.

அவள் நடையழகில், உடையழகில்  சொக்கிப்போன அம்பிகாபதி தான் சோழனின் அரண்மனையில் இருப்பதை மறந்து கவிதை நயாகராவை பீய்ச்சியெறிகிறான் இதோ அந்த முன்னிரண்டு வரிகள்


" இட்டடி நோவ, எடுத்தடி கொப்புளிக்க
வட்டில் சுமந்து மருங்கு அசையக் "

அவள் நடந்து வரும் போது அவள் மெல்லிய, சிவந்த  பாதம் வலிக்கிறதாம்,  அடுத்த அடியை அவள் வைக்கும் போது பாதம் கொப்பளித்து விட்டதாம், வட்டில் எனும் பாத்திரத்தை அவள் சுமந்து வருவதால் அவள் மெல்லிடை அசைகிறதாம்.  இவ்வாறு பாடுகிறான் அம்பிகாபதி, அவைக்களத்தில் உள்ளோர் அனைவரும் திடுக்கிட்டு விழிக்கின்றனர்,
கம்பரோ "அய்யோ!  " இவன் அரசன் மகளை இவ்வாறு புகழ்கின்றானே, அவளை இவன் காதலிப்பது தெரிந்தால் அரசன் வெகுண்டெழுவானே என்று நினைத்துக்கொண்டே அம்பிகாபதியின் தொடையை கிள்ளுகின்றார்.  அம்பிகாபதியும் தன்னிலை மீண்டு பாடலை நிறுத்தியவாறு விழிக்கின்றான் .
கம்பர் அதன் தொடர்ச்சியாக அடுத்த வரிகளை பாட ஆரம்பிக்கின்றார்.

 கொட்டிக்
கிழங்கோ கிழங்குஎன்று கூறுவாள் நாவில்
வழங்குஓசை வையம் பெறும் .

என்று பாடி முடிக்கிறார்  . இப்போது அம்பிகாபதியும் கம்பரும் பாடிய பாடலையும் அதன் முழு பொருளையும் பாருங்கள்


இட்டடி நோவ, எடுத்தடி கொப்புளிக்க
வட்டில் சுமந்து மருங்கு அசையக் - கொட்டிக்
கிழங்கோ கிழங்குஎன்று கூறுவாள் நாவில்
வழங்குஓசை வையம் பெறும்

அவள் நடந்து வரும் போது அவள் மெல்லிய, சிவந்த  பாதம் வலிக்கிறதாம்,  அடுத்த அடியை அவள் வைக்கும் போது பாதம் கொப்பளித்து விட்டதாம், வட்டில் எனும் பாத்திரத்தை அவள் சுமந்து வருவதால் அவள் மெல்லிடை அசைகிறது யாருடையது என்றால், வீதிகளில் கொட்டிக் கிழங்கு எனும் கிழங்கை   " கொட்டிக்கிழங்கு வாங்கலையோ கொட்டிக்கிழங்கு " என்று கூறுபவளின் இனிமையான குரலுக்கு இந்த உலகத்தையே கொடுக்கலாம்.

என்று பின்னிரு வரிகளை மாற்றிப்பாடி பொருளையும் மாற்றி தன் மகனை அங்கே அப்போது  காப்பாற்றினார் கம்பர் .


....... ஆனால்  .

தொடரும்  .


அன்போடும் இலக்கியத்தோடும் ...

சுரேஷ்மணியன்.

Comments

Post a Comment

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விளக்கவே , அரண்டு போய் தமிழ

திருவள்ளுவமாலை, கபிலர் பாடல்

அனைவருக்கும் அன்னைத்தமிழ் வணக்கம்.  திருவள்ளுவமாலை 5 ஆம் பாடல் ; கபிலர்  தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி (௫) கருத்துரை வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது?      என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோல ஆகும் சுரேஷ்மணியன் M A , 

திண்ணை

காணாமல் போன திண்ணை. அனைவருக்கும் இனிமையான வணக்கம். இன்றை நவநாகரீக தமிழரின் வாழ்வியல் பயன்பாட்டிலும், அடித்தட்டு சமூக மக்களின்,  கிராமிய வாழ்க்கை பயன்பாட்டிலும் அவர்களாகவே வலிந்து தொலைத்துக் கொண்டிருப்பது " திண்ணை " என்றுதான் சொல்ல வேண்டும். காணாமல் போன தமிழரின் கருவிகளாக  முதன்மையானதாக - அம்மிக்கல்லையும் - மாவு அரைக்கும் குடைக்கல்லையும் -உரலையும் உலக்கையையும் சேர்த்துக்கொள்ளலாம். அரிதினும் அரிதாய் மேற்சொன்ன அடுதலுக்கு ( சமையல் செய்ய உதவிய பொருள்கள் ) பயன்பட்ட பொருள்களை சில கிராமங்களில் பயன்பாட்டில் இருப்பதை காணும் போது ஓர் இனம் புரியாத மகிழ்ச்சியும், பெருமிதமும் தோன்றும். அத்தகைய காணாமல் போன பட்டியலில் நம்மவர்கள் திண்ணையையும் சேர்த்துவிட்டார்கள். `` திண்ணை " இது தமிழரின் வீட்டின் முன்பகுதியில் நிலைக்கதவு எனும் வாசற்படியின் நடைபாதையின் இருமருங்கிலும் ஒன்றரை அடி முதல் உயரம் கொண்டதாய் அமைக்கப்பட்டிருக்கும். திண்ணை பள்ளிக்கூடம், திண்ணைப்பேச்சு, திண்ணையிலே கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துதான் வாழ்க்கை எனும் சொற்கள், சொலவடைகள்  வழி திண்ணையின் பயன்பாட்ட