Skip to main content

கம்பன்

அனைவருக்கும் வணக்கம். நிற்க,  கவிச்சக்ரவர்த்தி,  நம் பாட்டன் கம்பனுடைய  ராமகாதையில் வாலி வதைப் படலத்தில்,இராமன் மறைந்து நின்று வாலி மீது அம்பெய்தி,வாலி வீழ்கிறான்.
தன் நெஞ்சில் தைத்த வாளியை (அம்பு)  எடுத்துப் பார்க்கிறான் வாலி .
அந்த அம்பில் இராமன் என்ற பெயரைப் பார்க்கிறான், பின்வருமாறு கம்பன் தன் பாடலில் கூறுவான்


மும்மை சால் உலகுக்கு எல்லாம்
    மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
    தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே எழுமை நோய்க்கும்
    மருந்தினை, ‘இராமன் ‘என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக்
    கண்களின் தெரியக்  கண்டான்.


           மூன்று என்னும் தொகை
பொருந்திய (வானம், பூமி, பாதாளம்) என்னும் உலகங்கள் யாவற்றிற்கும் ,ஆதாரமாய்ப் பொருந்திய மந்திரத்தை , முழுவதுமாகத் தம்மையை வழிபடும்
அடியார்கட்கு அளிக்கும்,  ஒப்பற்ற சிறப்பு மிக்க
சொல்லை , தான் தனித்தே இந்தப் பிறவியிலேயே , எழுவகைப் பிறப்புக்களாகிய நோய்
வராமல் தடுக்கும் மருந்தை; இராமன் என்கின்ற ,
 சிறப்புப் பொருந்திய திருநாமத்தை;
 தன் கண்களினால் (அவ்வம்பில்)
தெளிவாகப்  பார்த்தான்.

அதன் பிறகு வாலிக்கும், இராமனுக்கும் இடையே ஓர் சொற்போர் நிகழ்கிறது, அது பெரும் இலக்கிய விவாதமாக இன்றும் நடந்து வருகிறது.

வாலியை இராமன் மறைந்திருந்து கொல்லலாமா? இது முதல் வினா.  இது அநியாயம் இல்லையா? இது அடுத்த வினா.
இவ்வாறு இலக்கிய சார்புடையோரும், மக்களும்  காலம் காலமாக நமக்குள்   மிகவும் காரசாரமாகப் பேசி வருகிறோம். பேரா.ஞானசம்பந்தமும் சாலமன் பாப்பையாவையும் வைத்து பட்டிமன்றம் நடத்தினால் ஒருமாதம் ஆனாலும் தீர்ப்பு சொல்ல முடியாமல் திகைப்பார்கள்! கடையில், ‘அவுக  சொல்றதும் சரியாத்தேங் இருக்கு.. இவுக சொல்றதும் சரியாத்தேங் இருக்கு’ என்பார்கள்!

ஆனால் நமது கம்பர் ,வாலியைப் பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா?

1)வாலி தனக்கு கிடைத்த வரங்களை எல்லாம் பொது நலத்திற்குப் பயன் படுத்தவில்லை.

2)பயிருக்கு வேலியாக இருந்து பாதுகாக்க வேண்டியவன் காளை மாடாக மாறி துவம்சம் செய்பவனாக மாறி விட்டிருந்தான்.

3)சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய அவனே தகர்த்தெறிந்தான்.

4)பிறன்மனை நோக்கினான்.

5)களவுமனம் புரிதல் எனும் பெருங்குற்றம் புரிந்த சுக்ரீவனின் நிலங்களைப் பிடுங்கினான்.

6)சுக்ரீவனை உயிர்வாழக் கூட அனுமதிக்காமல் துரத்தியடித்தான்.

7)அவனால் பொதுவாக யாருடைய உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை உருவாகியது!

 கடைசியாக தான் செய்தது சரி  , ராமனாகிய நீ என்னைக் கொன்றது தவறு என ராமனை நோக்கி வாலி   இகழ ஆரம்பிக்கிறான்.

அதில் ஒரு பாடல்……

“கோ இயல் தருமம், உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் -
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்! - உடைமை அன்றோ?
ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த
தேவியை, பிரிந்த பின்னை, திகைத்தனை போலும், செய்கை! “

”ஓவியத்தில் எழுத முடியாத அழகுள்ள ராமனே!உன் குலத்தோர் அரச தர்மம் தவறாதவர்கள். ஆனால் நீ?!சீதையைப் பிரிந்ததனால் மனம் பேதலித்து இவ்வாறு செய்தாயோ?” என்கிறான் வாலி.

இகழும்போது கூட அவன் அழகைப் புகழ்வானா ?
என ஒரு கேள்வி நமக்குள் தோன்றும் .அவ்வாறிருக்க நாம் வேறு என்ன
பொருள் கொள்ளலாம் ?

அக்காலத்தில் மன்னர்களின் வீரச் செயலை ஓவியமாகத் தீட்டி வைப்பர்  ( புகைப்பட வசதி கிடையாது ) அவ்வாறு” இந்த நிகழ்ச்சியை ,நீ என்னைக் கொன்ற நிகழ்ச்சியை, படமாகத் தீட்டினால் உன்னை அதில் எழுத முடியாது;ஏனெனில் நீ மறைந்திருந்து கொன்றாய்,   எனவே ஓவியத்தில் தெரிய மாட்டாய் “என்பதும் ஒரு பொருளாகத் தோன்றுகிறது .

இதுவே கம்ப ரசம் டோஸ் 1 .

 அடுத்த பதிவு கம்பனின்                  " கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் " டோஸ் 2 .

இப்படிக்கு:  கீ போர்டு முனையில்,  சு.சுரேஷ்மணியன்

Comments

Post a Comment

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விளக்கவே , அரண்டு போய் தமிழ

திருவள்ளுவமாலை, கபிலர் பாடல்

அனைவருக்கும் அன்னைத்தமிழ் வணக்கம்.  திருவள்ளுவமாலை 5 ஆம் பாடல் ; கபிலர்  தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி (௫) கருத்துரை வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது?      என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோல ஆகும் சுரேஷ்மணியன் M A , 

திண்ணை

காணாமல் போன திண்ணை. அனைவருக்கும் இனிமையான வணக்கம். இன்றை நவநாகரீக தமிழரின் வாழ்வியல் பயன்பாட்டிலும், அடித்தட்டு சமூக மக்களின்,  கிராமிய வாழ்க்கை பயன்பாட்டிலும் அவர்களாகவே வலிந்து தொலைத்துக் கொண்டிருப்பது " திண்ணை " என்றுதான் சொல்ல வேண்டும். காணாமல் போன தமிழரின் கருவிகளாக  முதன்மையானதாக - அம்மிக்கல்லையும் - மாவு அரைக்கும் குடைக்கல்லையும் -உரலையும் உலக்கையையும் சேர்த்துக்கொள்ளலாம். அரிதினும் அரிதாய் மேற்சொன்ன அடுதலுக்கு ( சமையல் செய்ய உதவிய பொருள்கள் ) பயன்பட்ட பொருள்களை சில கிராமங்களில் பயன்பாட்டில் இருப்பதை காணும் போது ஓர் இனம் புரியாத மகிழ்ச்சியும், பெருமிதமும் தோன்றும். அத்தகைய காணாமல் போன பட்டியலில் நம்மவர்கள் திண்ணையையும் சேர்த்துவிட்டார்கள். `` திண்ணை " இது தமிழரின் வீட்டின் முன்பகுதியில் நிலைக்கதவு எனும் வாசற்படியின் நடைபாதையின் இருமருங்கிலும் ஒன்றரை அடி முதல் உயரம் கொண்டதாய் அமைக்கப்பட்டிருக்கும். திண்ணை பள்ளிக்கூடம், திண்ணைப்பேச்சு, திண்ணையிலே கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துதான் வாழ்க்கை எனும் சொற்கள், சொலவடைகள்  வழி திண்ணையின் பயன்பாட்ட