Skip to main content

மூவர்ணத் துண்டு

இன்றைய கொரோனா நோய்த்தொற்றுக்காலத்தில் மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் ஏதும் வழங்காத அதிமுக வையும் ,அந்தக் கட்சியினரையும் பற்றி புலம்பி தீர்த்ததோடு அல்லாமல்  , நலத்திட்ட உதவிகளை சிறப்பாக செய்து வரும் திமுக வினரையும் பாராட்டி , அவர்கள் கொடுக்கும் நல உதவிகளை பெற தமது கட்சியினர் கூச்சப்படுவதையும் அப்பகுதியை சார்ந்த ( நாகை மாவட்டம் என தோன்றுகிறது  )அதிமுக  கட்சியை சார்ந்த நிர்வாகி ஒருவரின் ஆதங்கமான காணொளி ஒன்றை முகநூலில் ,  நண்பர் வின்சென்ட்ராஜ் அவர்களின் பக்கத்தில் பார்க்க நேரிட்டது.

அந்தக் காணொளியை பார்த்த பிறகு மனதில் நாஞ்சில் நாடன் அவர்களின் "விரதம்" என்ற சிறுகதை பளிச்சென்று நகைச்சுவையோடு  நினைவுக்கு வந்து போனது .

அந்த சிறுகதையின் கடைசியில் , முதன்மை பாத்திரமான சின்னதம்பியா  பிள்ளை  தனக்குத் தானே உள்ளூர சொல்லிக் கொள்வதாய் கதை இறுதி கட்டத்தை நெறுங்கும் 

" சே !  எல்லாம் இந்த திருநீறால் வந்த வினை  "

ஆனால் அந்தக் கதையில் தற்போதைய சூழலை வைத்து கதைக்கருவை மாற்றி ,சின்னதம்பியா பிள்ளை  இடத்தில் ஒரு அதிமுக வினர் ஒருவரை பொருத்தினால்

சே !  எல்லாம் இந்த மூன்று கரை போட்ட துண்டினால் வந்த வினை  " என்பதாகவே இருக்கும்.

வாய்ப்பிருப்பின்  நாஞ்சில் நாடனின் " விரதம் " சிறுகதை
👇👇👇கீழே உள்ளது படித்துப் பாருங்கள்.

*விரதம்*

அன்று அமாவாசை. சின்னதம்பியா பிள்ளையின் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. எனவே பழைய கஞ்சியைக் குடிப்பதற்குப் பதில், தன் பெண் வீட்டிற்குப் போய் அமாவாசைச் சாப்பாடு சாப்பிடலாம் என்று கிளம்பினார். முதலில் பெரிய பெண் வீட்டிற்குப் போனபோது அப்பா சாப்பிட்டு வந்துவிட்டார் என்கிற தோரணையில் பேசினாள். இளைய பெண்வீட்டில் சாப்பிடலாம் என்றால், ‘‘அக்கா வீட்டிற்குப் போனேன் என்று இளைய மகளிடம் கூறும்போது, “உங்கிட்ட எத்தனை நாளப்பா சொல்றது, வந்தா நேரே இங்கே வான்னு. நீ பாட்டுக்கு அக்கா வீட்டிலே சாப்பிட்டு, அப்புறமா இங்கே வாறே’’

“அது சரியில்லேமா…. அம்மாச்சியாட்டா…. இன்னிக்கு….”

“அம்மாச்சியானா என்னா? நானுந்தான் குளிச்சு முழுகிட்டு உல வைச்சேன். உன் விரதத்திற்கு என் வீட்டில் சாப்பிட்டா என்ன பங்கம் வந்திடுமாம்! இனி இப்படி வா சொல்லு கேன்…”

அன்பில் விளைந்த கோபம், அவரை எட்டியது. அடுக்களையில் காய்ந்த தேங்காய் எண்ணெய் பப்படத்தைப் போட்டதில் உண்டான சொர்…… என்ற ஒலி.

கிழவருக்குத் தோன்றியது. இன்னும் சாப்பிடலைன்னு இவளிடம் சொன்னால் என்ன? என்ன இருந்தாலும் மகள்தானே! பெற்ற மகளிடமுமோ கௌரவம் பார்ப்பது?

செருப்பால அடி, மருமகன் வேற இருக்கான். அப்படியென்ன பசி? மரியாதை கெட்ட பசி? அப்படி வயத்தை நிறைச்சிக்காட்டித்தான் என்ன?

மனம், வாதமும் எதிர்வாதமும் செய்தது. கிழவருக்கு அப்போதுதான் படீரென்று புத்தியில் உரைத்தது. ‘சே! எல்லாம் இந்தத் திருநீறால் வந்த வினை!’

ஆமாம், ஐம்பதாண்டு பழக்கம். குளித்துவிட்டு திருநீறணிந்து விட்டுத்தான் சாப்பிடுவார். நெற்றியில் துலங்கும் நீறுடன் அவர் வெளியே இறங்கிவிட்டால், பிள்ளைவாள் சாப்பிட்டாகிவிட்டது என்று பொருள். இது ஊர் மாத்திரமல்ல, அவருடைய உறவினர்களும் அறிந்ததொன்று. அதுதான் இன்று அவரைக் காலை வாரி விட்டுவிட்டது.

 “குடிக்கக் கொஞ்சம் வெந்நீர் குடும்மா”. விரத நாட்களில் சாப்பாடாகிவிட்டால், இரவு பலகாரம் வரை அவர் வெந்நீர்தான் சாப்பிடுவது, ‘சாப்பிட்டாகி விட்டது’ என்று நிச்சயமாக்கப்பட்டுவிட்ட பிறகு அதிலிருந்து நழுவ முடியுமா? வெந்நீரை வாங்கிக் குடித்துவிட்டு பேரனின் கன்னத்தை ஒரு தட்டுத் தட்டிவிட்டு, “சரிம்மா, கீழத் தெருவில் ஒரு ஆளைப் பார்க்கணும், பாத்துட்டு வந்துடுறேன். நேரமானா அவரு வெளியே போயிடுவாரு” என்று சாக்குச் சொல்லி விட்டு, ஒன்றரை மணி வெய்யிலில் இறங்கினார்.

வெயிலையும் பொருட்படுத்தாமல் வேகு வேகென்று முக்கால் மைல் நடந்து வீட்டினுள் நுழைந்து, அடுக்களைக்குள் புகுந்து, பானையிலிருந்த பழையதைப் பிழிந்து வைத்து விட்டு, ஊறுகாய் பரணியைத் தேடிய சின்னத்தம்பியா பிள்ளையை, போர்த்திக்கொண்டு படுத்திருந்த அவர் மனைவி விசித்திரமாகப் பார்த்தாள்.

அன்போடு ; சுரேஷ் மணியன்.

Comments

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விள...

நீ

கொஞ்சம் மது  தொட்டுக்கொள்ள உன் நினைவுகள்,  நீ நினைக்க நான், புகைக்க உன் புன்னகை, இனி வேறென்ன வேண்டும் எனக்கு. இப்படியாக பயணிப்போம்..... கரிசல் நாடன்.

அனிச்சம்

தமிழ் பேசும் உறவுகளுக்கு இனிய காலை/ மதியம் /மாலை /இரவு வணக்கம் ( படிக்கும் நேரத்திற்கேற்ப பொழுதை சேர்த்துப் படிக்கவும்). ""அழகாய் இருப்பவை எல்லாம்  உன்னை நினைவுபடுத்துகின்றன உன்னை நினைவுபடுத்துபவை எல்லாம் அழகாக இருக்கின்றன'' என்ற காதல் கவி தபுசங்கரின் வரிகளைப் போல,                         "" படித்தற்குரியதெல்லாம் ரசனைக்குரியதாய் இருக்கிறது  ரசனைக்குரியதெல்லாம் படித்தற்குரியதாய் '' இருக்கிறது என்பேன் நான் .     அகநூலோ,  புறநூலோ,  அகப்புற நூலோ,  -நீதிநூலோ எவ்வித நூலாயினும் வாழ்வியல் கருத்து நெறிகளைத்தாண்டி இலக்கிய இன்பம் பயக்குகின்ற, இலக்கிய ரசனை தருகின்ற கருத்தமைந்த வரிகள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும், இது திண்ணம்.            ஆனால் இன்றைய தமிழிலக்கிய மாணவர்களுக்கான  கல்வி முறையில் ரசனை, அழகியல் என்பதை இலக்கியங்களின் துணைக் கொண்டு கற்பிக்கப்படவில்லை, அது போன்ற பாடத்திட்டங்களும் அமைக்கப்படவில்லை ,அப்படியே பாடத்திட்டம் அமைக்கப்பட்டிருந்தாலும், தக்காரா...