Skip to main content

காளமேகம்

காளமேகப் புலவரின் தனிப்பாடல் என்றாலே எப்போதும் எனக்கு தனியாத பெருவிருப்புண்டு. எனது கல்லூரி காலத்தில் தத்தனூர் கிளை நூலகம் என்னுள்  இருந்த புத்தக பசியை போக்கி,  புதிய பாதையை எனக்கு அமைத்துக் கொடுத்தது.  அங்குதான் காளமேகப் புலவரோடு எனக்கு அறிமுகம் கிடைத்தது கம்பனின் தனிப்பாடல்கள் நிறைய கிடைத்தன.  அந்த வகையில் தமிழில் குறிப்பிட்ட ஒரே வர்க்க எழுத்தை வைத்து அவர் எழுதிய  பாடல் மிகவும் ரசனைமிக்கது . அந்த பாடலை ஒரு முறை வாய்விட்டு உரக்க வாசித்து பாருங்கள் நாக்கும், பற்களும் நன்றாக நாட்டியம் ஆடுவது போல இருக்கும்.  இதோ அப்பாடல்.

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?

உரத்துப் படிக்கும்போது பேசும் சக்தியற்ற ஊமை மனிதன் பிதற்றுவது போல
இருக்கும். தகர வரிசை எழுத்துக்களை கண்டவிதமாக அடுக்கி எழுதிவைத்துள்ளது
போல தோன்றும். ஆனால் ஆழ்ந்து படித்துக் கருத்தை அறியும்போது
காளமேகப்புலவரின் திறமையை மட்டுமல்ல, தமிழ்மொழியின் வலிமையையும் எண்ணி
எண்ணி இறும்பூதடையாமல் இருக்க முடியாது.

வண்டொன்றைப் பார்த்துப் பாடுவது போல இந்தப்பாடல் அமைந்துள்ளது.

வண்டே! தத்தித் தாது ஊதுதி – தாவிச் சென்று பூவின் மகரந்தத்தை ஊதி
உண்ணுகின்றாய்.
தாது ஊதித் தத்துதி – மகரந்தத்தை ஊதி உண்டபின்னர் திரும்பவும் எங்கோ
போகின்றாய்.
துத்தித் துதைதி - துத்தி என்று ரீங்காரமிட்டவாறே இன்னுமொரு பூவிற்குச்
செல்கின்றாய்.
துதைது அத்தா ஊதி – அநதப்பூவினை நெருங்கி அதன் மகரந்தத்தையும் ஊதி
உண்ணுகின்றாய்.
தித்தித்த தித்தித்த தாது எது – உனக்குத் தித்திப்பாகத் தித்திப்பாக
இருந்த மகரந்தம் எது? தித்திப்பாகவிருந்த பூ எது? அழகாயிருந்த பூவிதழ்
எது? என்பது இப்பாடலின் கருத்து.

தாது என்ற சொல் மலரையும் குறித்து வந்திருக்கிறது. மலரின் இதழையும்
குறித்து வந்திருக்கின்றது. மகரந்தத்தையும் குறித்து வந்திருக்கின்றது.

நன்றி ! மீண்டும் ஓர் பழந்தமிழ் பாடலுடன் சந்திப்போம்.  அன்போடும் தமிழோடும் உங்கள் சுரேஷ் சுப்பிரமணியன் .

Comments

Popular posts from this blog

படித்தேன் அது படி தேன்.

சிந்தை சூழ் கம்பன் கம்பனை எனக்குள் ஆழ வேரூன்ற வைத்த இடம் தத்தனூர்  MR கல்லூரியும், தத்தனூர் மேலூர் கிளை நூலகமும்  ஆகும். கம்பன் என்றாலே எனக்குக் குற்றால நீர்வீழ்ச்சியாய் உள்ளம் பூரித்துப் போகிறது, வார்த்தைகள் விக்கித்து நிற்கின்றன.  என்னவென்று சொல்வேன், ஏதென்று சொல்வேன் அவன் காவியப் புகழை.  நெய்தலுக்கும், பாலைக்கும், மருதத்துக்கும், முல்லைக்கும் மேலாக உச்சியில் இருக்கும் குறிஞ்சி நிலத்தின் உச்சியில் வானோடு கைகோர்த்து, மதியோடும், கதிரோடும் தோழமை பேசும் உச்சி மலையில் விளைந்த கற்பகமரம் அவன். கண்ணதாசன் கம்பரின் ஆற்றலைப் புகழும் போது, "  பத்தாயிரம் கவிதை முத்தாக அள்ளிவைத்த சத்தான கம்பனுக்கு ஈடு - இன்னும் வித்தாக வில்லையென்று பாடு! சீதை நடையழகும் ஸ்ரீராமன் தோளழகும் போதை நிறைந்ததெனச் சொல்லி - எனைப் போட்டான் மதுக்குடத்தில் அள்ளி! அண்ணனொடு தம்பியர்கள் நாலாகி ஐந்தாகி ஆறேழு ஆனவிதம் கூறி - எனை ஆளுகிறான் மூளைதனில் ஏறி!  " என்று புகழ்ந்து பாடுவார். அத்தகைய வளமிக்க கற்பனைக்கும், கருத்துக்கும் உரித்தானவர் கம்பர் என்றால் அது மிகைஅன்று. அயோத்தியை வி...

அனிச்சம்

தமிழ் பேசும் உறவுகளுக்கு இனிய காலை/ மதியம் /மாலை /இரவு வணக்கம் ( படிக்கும் நேரத்திற்கேற்ப பொழுதை சேர்த்துப் படிக்கவும்). ""அழகாய் இருப்பவை எல்லாம்  உன்னை நினைவுபடுத்துகின்றன உன்னை நினைவுபடுத்துபவை எல்லாம் அழகாக இருக்கின்றன'' என்ற காதல் கவி தபுசங்கரின் வரிகளைப் போல,                         "" படித்தற்குரியதெல்லாம் ரசனைக்குரியதாய் இருக்கிறது  ரசனைக்குரியதெல்லாம் படித்தற்குரியதாய் '' இருக்கிறது என்பேன் நான் .     அகநூலோ,  புறநூலோ,  அகப்புற நூலோ,  -நீதிநூலோ எவ்வித நூலாயினும் வாழ்வியல் கருத்து நெறிகளைத்தாண்டி இலக்கிய இன்பம் பயக்குகின்ற, இலக்கிய ரசனை தருகின்ற கருத்தமைந்த வரிகள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும், இது திண்ணம்.            ஆனால் இன்றைய தமிழிலக்கிய மாணவர்களுக்கான  கல்வி முறையில் ரசனை, அழகியல் என்பதை இலக்கியங்களின் துணைக் கொண்டு கற்பிக்கப்படவில்லை, அது போன்ற பாடத்திட்டங்களும் அமைக்கப்படவில்லை ,அப்படியே பாடத்திட்டம் அமைக்கப்பட்டிருந்தாலும், தக்காரா...

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விள...