Skip to main content
தமிழ் என்ற சொல்லை நாம் உச்சரிக்கும் போது எத்தைகய இனிமை இருக்கிறதோ, அது போல "கம்பர் " என்ற சொல்லை உச்சரிக்கும் போது ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியும்,  இறுமாப்பும் எனக்கு ஏற்படுவது உண்டு. அதிலும் தமிழ் கடல் நெல்லை கண்ணன் ஐயா அவர்கள் கம்பனை அவன் பாடல்களை  விளக்கும் போது மனம் குதூகளிக்கும் . கண்ணதாசன் உள்ளிட்ட பல கவிஞர்களின் எழுத்து வண்டி ஓடியதே,   கம்பனின் கவிதைகளை  அதன் சாரத்தை  அவர்கள் கடன் வாங்கிக் கொண்டதால்தான். இது முற்றிலும் உண்மை,  அதை கவியரசு கண்ணதாசனே கூறியிருக்கின்றார். சரி விடயத்திற்கு வருகிறேன்

புலவர்களின் பாடக்கருத்தை விளக்கும் உரைகளான தெளிவுரை,  நயவுரை,  பொழிப்புரை என்பன போன்றவைகள் புலவன் கூறவந்த உண்மையான கருத்தை படிப்போருக்கு விளக்குகிறதா ?  என்றால்  ஆம் என்று நிச்சயம் கூறிவிட முடியாது.  ஏனெனில் யானையை தடவி பார்த்த  குருடர்களின் கதை போன்று  யானையின் வாலை பிடித்து பார்த்த குருடன் யானை என்பது மெல்லியதாக நீட்டமாக இருக்கும் என்றும்,  மற்ற ஒரு குருடன் யானையின் காலை பிடித்து பார்த்து யானை என்பது தடிமனாக உரல்கட்டை போன்று இருக்கும் என்று  விளக்கினார்களோ  அதுபோல பல உரையாசிரியர்களும்,பல உரை நூல்களும்   பாடம் நடத்தும் பேராசிரியர்களும்,   ஆளுக்கு ஒருவிதமாக புலவர்களின் மூல பாடலுக்கு   தன்னுடைய கருத்தை அல்லது விளக்கத்தை கூறுகிறார்கள்,  கடைசி வரை புலவன் கூற வந்த உண்மையான கருத்து நமக்கு தெரிந்திடாமல் போகிறது இதை நான்  கல்லூரியில் இலக்கியம் பயின்ற  காலத்தில் அதிலும் குறிப்பாக கம்பனை படித்த போது  உணர்ந்திருக்கிறேன் . கம்பனை முதலில் எனக்கு அறிமுகப்படுத்தியது எம் சுத்தமல்லியை சார்ந்த மா.குமார் அண்ணன்  அவர்கள்,  அவருக்கு இந் நேரம் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் பலப் பல  .
 ஒற்றை வார்த்தைக்கு பின்னால் ஒரு வியப்பான நிகழ்வை கம்பர் அதிகமான பாடல்களில் ஒளித்து வைத்திருப்பார் அது எளிதில் நமக்கு வசப்படாது அல்லது சிக்காது சில ஜாம்பவான்களின் உரைகள் மூலமே அதை நாம் அறிந்து விளங்கிட முடியும் . அதற்கோர் ஒரு சிறு எடுத்துகாட்டு கம்பனின் ராமகாதையில்  இருந்து உங்களுக்காக ஆனால் நாத்திக கண்ணாடியை கழற்றி வைத்து விட்டு நாம் கம்பனை அணுகினால் பருகப் பருக திகட்டாத அமிர்தத்தை அவன் நமக்கு வாரி வழங்குவான் .

தசரத சக்கரவர்த்தி ஒருநாள் தன் அரண்மனையில் கொலு மண்டபத்தில் அமைச்சர் பரிவாரங்கள் புடைசூழ அமர்ந்திருந்தான். அவன் அந்த சபையில் வீற்றிருந்த காட்சியானது இந்திர லோகத்தில் இந்திரன் அரசு வீற்றிருந்ததைப் போல இருந்தது. அப்போது சினத்திற்குப் பெயர் போன விஸ்வாமித்திர முனிவர் அந்த அரசவைக்கு வந்து சேர்ந்தார்.

தவ வேள்விகளில் வல்லவரான விஸ்வாமித்திர முனிவர்  கண்ட தசரத சக்கரவர்த்தி, தன் கழுத்தில் அணிந்திருந்த மணி ஆரங்கள் ஒளிர வேகமாக எழுந்து வந்து, தன்னை நாடி வந்திருக்கும் முனிவரின் பாதங்களில் விழுந்து பணிந்து வணங்கினான். இந்திரனுடைய சபைக்கு பிரம்ம தேவன் வருகின்ற போது இந்திரன் எழுந்து வணங்குவதைப் போல இருந்தது அந்தக் காட்சி.

தசரதன் விஸ்வாமித்திர முனிவருக்கு முறைப்படியான பல சிறப்புக்களைச் செய்து, உபசார மொழிகளைக் கூறலானான். "நான் வந்து தங்களது அடிபணிந்து எனது அரண்மனைக்கு அழைப்பது போக, தாங்களாகவே என்னைத் தேடி வரும்படி நேர்ந்ததற்கு நான் என்ன புண்ணியம் செய்தேனோ? இது என் குலம் செய்த பேறு; நான் செய்த நல்வினையின் பயன்" என்றெல்லாம் மன்னன் உபசார வார்த்தைகளைக் கூறினான்.

"தசரதா! நீ வேறொன்றும் பெரிய காரியம் எதுவும் எனக்காகச் செய்ய வேண்டாம். அடர்ந்த வனத்துக்குள் நான் ஒரு தவ வேள்வியை நடத்துகிறேன். அதை அரக்கர்கள் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்; எப்படி காமம், கோபம் இவை தவம் புரிவோர்களுக்கு இடையூறு செய்யுமோ அப்படி செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அப்படி இடையூறு செய்யாவண்ணம் அவர்களை தடுத்து நிறுத்த நின் மக்கள் நால்வரில் கரிய செம்மலாகிய ராமனை என்னோடு அனுப்பி வை" என்றான். முனிவனுடைய இந்த வார்த்தைகள் அவனது உயிரையே பறிப்பது போல இருந்தது. என்ன இது? இந்த முனிவர் தனது உயிரையே அல்லவா யாசகம் கேட்கிறார்.

முனிவருடைய இந்த கோரிக்கை தசரத மன்னனின் காதில் விழுந்தது எப்படி இருந்தது தெரியுமா? ஏற்கனவே உடலில் வேல் பாய்ந்து பள்ளம் விழுந்த ஆழமான புண்ணில் தீ நுழைந்தது போல வேதனை அளித்தது., அத்தோடு கண்பார்வையிழந்த ஒருவனுக்கு திடீரென கண் பார்வை பெற்று, மறுபடியும் கண்பார்வை பறிபோனால் அவன் எத்தகைய துயரை அடைவானோ !  அது போல தசரத மன்னனும் துயருற்றான்  . அந்த காட்சியை என் கம்பர் பாட்டன் தனது கவிச் சித்திரம் மூலம் விளக்கும் பாடலை பாருங்கள்

எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தின் எறிவேல் பாய்ந்த
புண்ணிலாம் பெரும் புழையில் கனல் நுழைந்தால் எனச் செவியில் புகுதலோடும்
உண்ணிலா வியதுயரம் பிடித்து உந்த ஆருயிர் நின்று ஊசல் ஆடக்
கண்ணிலான் பெற்றிழந்தான் என உழந்தான் கடும் துயரம் காலவேலான்".

இங்கே  " கண்ணிலான் பெற்றிழந்தான் என உழந்தான்  " எனும்  வரிக்கு பல மேம்போக்கான உரை நூல்களும், பேராசிரியர்களும்,  கூறுவது என்னவெனில் கண்பார்வையிழந்த ஒருவனுக்கு திடீரென கண் பார்வை பெற்று, மறுபடியும் கண்பார்வை பறிபோனால் அவன் எத்தகைய துயரை அடைவானோ !  அது போல தசரத மன்னனும் துயருற்றான் என்பதே ஆனால் அது கம்பர்கூற வந்த உண்மையான கருத்து அது  அல்ல  .

தசரதன் ஒரு காலத்து வேட்டைக்குச் செல்கிறான். அக்கால், ஒரு யானை நீர் குடிப்பதான ஓசை கேட்கவே அவ்வோசை எழுகின்ற இடத்தை உய்த்துணர்ந்து தன் அம்பை விடுத்தான். ஓசை பிறந்த இட உய்த்துணர்வு பிழையன்று; ஆனால் அது யானை நீர் குடிக்கும் ஓசையன்று; கண் பார்வையற்ற தாய் தந்தையர்க்காக அவர்க்கு மகன் கமண்டலத்தில் நீர் மொண்டு கொண்டிருந்ததன் ஓசையாகும். யானை நீர் குடிப்பது போன்று அவ் ஓசை இருந்ததால் யானை எனக் கருதித் தன் வில்லின்றும் அம்பு போக்கிவிட்டானே, தசரதன். அவ்வம்பு குறி தவறாமல் அவ்வோசை உண்டாக்கிய அவன் மீது தைக்கவே அவனது அலறல் கேட்டது. ஓடிப் போய்ப் பார்க்கத் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தவன் குற்றுயிராகக் கிடந்தான்.
            அவனை அணுகி விவரம் கேட்கக் கண் பார்வையற்ற நிலையில் தண்ணீர்க்காகத் தன் பெற்றோர் தவிப்பதைச் சொல்லி உயிர்விட்டான் அவனுக்குரிய பெற்றோர்‌க்காக நீர் கொண்டு சென்று அளிக்க , அந் நீர் தருபவன் வேறு ஒருவன் என்று உய்த்துணர்ந்து அவர்கள் அவனை விவரம் வினவ, நடந்ததைச் சொன்னான் தயரதன். தானே அவர்களை ஆதரிப்பதாகவும் சொன்னான். ஆனால் அதனை ஒப்பாத அக் கிழத் தகப்பன், மிகுந்த தாங்கொணா மனச் சோர்வோடு "என்போல் நீயும் புத்திர சோகத்தால் சாவாய்" என்று அம் முனிவன் சாபம் இட்டதோடு அப்பெற்றோர் இருவரும் இறந்தனர்.

  " கண்ணிலான் பெற்றிழந்தான் என உழந்தான்  " எனும்  வரிக்கு உண்மையான கம்பன் கூறவந்த பொருளை
இப்போது நீங்கள் ஓரளவு அனுமானித்திருக்க முடியும்

எவ்வாறு அங்கே கண் பார்வை இல்லாத அவ் வயோதிக பெரியோர் தன் மகனை இழந்த போது எத்தகைய துயரை அடைந்தார்களோ அது போல தசரதனும் விசுவாமித்திர முனிவர்   அவனது புதல்வனை வேள்வி பாதுகாப்புக்கு கேட்ட போது துயரமடைந்தான்.

இங்கேதான் என் கம்பன் பாட்டன் இது போன்ற நயமிக்க கவிதை வளத்தால் உலக கவிஞர்களை எல்லாம் மிஞ்சி தொடுவான வெளியை தொட்டுபார்க்கிறான்.

மீண்டும் ஒரு இலக்கியப் பதிவோடு வருகிறேன். அன்போடும் தமிழோடும்  :  சுரேஷ்மணியன்

Comments

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விளக்கவே , அரண்டு போய் தமிழ

திருவள்ளுவமாலை, கபிலர் பாடல்

அனைவருக்கும் அன்னைத்தமிழ் வணக்கம்.  திருவள்ளுவமாலை 5 ஆம் பாடல் ; கபிலர்  தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி (௫) கருத்துரை வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது?      என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோல ஆகும் சுரேஷ்மணியன் M A , 

திண்ணை

காணாமல் போன திண்ணை. அனைவருக்கும் இனிமையான வணக்கம். இன்றை நவநாகரீக தமிழரின் வாழ்வியல் பயன்பாட்டிலும், அடித்தட்டு சமூக மக்களின்,  கிராமிய வாழ்க்கை பயன்பாட்டிலும் அவர்களாகவே வலிந்து தொலைத்துக் கொண்டிருப்பது " திண்ணை " என்றுதான் சொல்ல வேண்டும். காணாமல் போன தமிழரின் கருவிகளாக  முதன்மையானதாக - அம்மிக்கல்லையும் - மாவு அரைக்கும் குடைக்கல்லையும் -உரலையும் உலக்கையையும் சேர்த்துக்கொள்ளலாம். அரிதினும் அரிதாய் மேற்சொன்ன அடுதலுக்கு ( சமையல் செய்ய உதவிய பொருள்கள் ) பயன்பட்ட பொருள்களை சில கிராமங்களில் பயன்பாட்டில் இருப்பதை காணும் போது ஓர் இனம் புரியாத மகிழ்ச்சியும், பெருமிதமும் தோன்றும். அத்தகைய காணாமல் போன பட்டியலில் நம்மவர்கள் திண்ணையையும் சேர்த்துவிட்டார்கள். `` திண்ணை " இது தமிழரின் வீட்டின் முன்பகுதியில் நிலைக்கதவு எனும் வாசற்படியின் நடைபாதையின் இருமருங்கிலும் ஒன்றரை அடி முதல் உயரம் கொண்டதாய் அமைக்கப்பட்டிருக்கும். திண்ணை பள்ளிக்கூடம், திண்ணைப்பேச்சு, திண்ணையிலே கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துதான் வாழ்க்கை எனும் சொற்கள், சொலவடைகள்  வழி திண்ணையின் பயன்பாட்ட